மாலைதீவில் எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த அதிபர் அப்துல்லா, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அரசுக்கு எதிராக செயல்படுவோர் மட்டுமின்றி சந்தேகப்படும் நபர்களை கைது செய்யும் முழு அதிகாரமும் பாதுகாப்பு படைகளிடம் வந்தது. முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாலத்தீவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தனது கவலையை தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹீதர் நாவேர்ட் கூறியதாவது:-
மாலத்தீவில் நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடனம் செய்திருப்பது குறித்த தகவல்கள் அமெரிக்காவிற்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அதிபர் யாமீன், ராணுவம் மற்றும் போலீஸ் என அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க வேண்டும், உச்ச நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
அத்துடன் பாராளுமன்றம் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியலமைப்பின்படி மக்களின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்படவேண்டும்.
2013-ல் யாமீன் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், கூட்டணியை திட்டமிட்டு தனிமைப்படுத்தி உள்ளார். முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்களை சிறையில் அடைத்துள்ளார், அல்லது நாடு கடத்தியுள்ளார். எம்.பி.க்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளை அழிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்துள்ளார். அரசு துறைகளை பலவீனப்படுத்தி உள்ளார்.