சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு அல்-குபர் அணு உலை தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவத்தின் மர்ம முடிச்சை இஸ்ரேல் இன்று விடுவித்துள்ளது.
சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெய்ர் அல்-ஸோர் பகுதியில் வடகொரியா நாட்டின் தொழில்நுட்பத்துடன் அணு உலையை அமைத்துவந்த சிரியா அரசு அங்கு ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த அணு உலை செயல்பாட்டுக்கு வருவதற்கு சிலநாட்களுக்கு முன்னர், கடந்த 6-9-2007 அன்று அந்த அணு உலைக்கு மேலே பறந்த மர்ம விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் ஒட்டுமொத்த கட்டிடமும் சில நிமிடங்களில் இடிந்து தரைமட்டமானது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த தாக்குதலுக்கு அண்டை நாடான இஸ்ரேல்தான் காரணம் என சிரியா அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
வல்லரசு நாடான அமெரிக்காவின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்தது.
இதற்கிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது பதவிக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பங்கள் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு நூல் ஒன்றை வெளியிட்டார்.
2007-ம் ஆண்டில் சிரியா அமைத்துவரும் அணு உலை தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் அந்நாள் பிரதமர் எஹுட் ஆல்மெர்ட் உடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், அணு உலையின்மீது தாக்குதல் நடத்துமாறு நான் கூறவில்லை என்றும் புஷ் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், 2007-ம் ஆண்டு அல்-குபர் அணு உலை தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவத்தின் மர்ம முடிச்சை இஸ்ரேல் இன்று விடுவித்துள்ளது.
5-9-2007 பின்னிரவு மற்றும் 6-9-2007 அதிகாலை நேரத்துக்குள் அந்த அணு உலைக்கு மேலே பறந்த இஸ்ரேல் நாட்டு விமானப்படையை சேர்ந்த 8 அதிநவீன போர் விமானங்கள் குண்டுகளை வீசி அந்த கட்டிடத்தை வெற்றிடமாக்கிய உண்மையை இஸ்ரேல் அரசு இன்று ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் உளவுப்படையிடம் உள்ள பழைய ஆவணங்களையும், புகைப்படங்களையும், தாக்குதல் நடத்திய போர் விமானங்கள் மூலம் எடுத்த வீடியோ பதிவுகளையும் இஸ்ரேல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
5-9-2007 அன்றிரவு 10.30 மணியளவில் தாக்குதல் நடத்த சென்ற இஸ்ரேல் போர் விமானங்கள் அந்த பணியை முடித்துவிட்டு 6-9-2007 அன்று அதிகாலை இஸ்ரேல் திரும்பியதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பரபரப்பு தகவல் வெளியான பின்னர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரேல் உளவுத்துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடத்திய அதிரடி தாக்குதலின் மூலம், அன்று சிரியாவாகட்டும், இன்று ஈரான் ஆகட்டும், அணு ஆயுதங்களை வைத்து மிரட்ட நினைப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை இஸ்ரேல் தெளிவுப்படுத்தி உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.