Top News

கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை: பாகம்-2



வை எல் எஸ் ஹமீட்
தோற்றுப்போன முஸ்லிம் அரசியல்
———————————————-
நல்லாட்சி அரசுக்காக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டது, கொழுந்துவிட்டெரியும் இனவாதத்தை அணைத்து அதன் சாம்பலைக்கூட துடைத்தெறிவதற்காக. நல்லாட்சி அரியணை ஏறியதும் இனவாதிகள் அச்சத்தின் உச்சத்தில் சிறிது காலம் அடங்கித்தான் இருந்தனர் எந்தச் சிறையில் கம்பியெண்ண வேண்டிவரும் என்று தெரியாமல்.

நல்லாட்சியோ பொம்மையாட்சி என்பது அவர்களுக்குப் புரிந்தது. நம்மவர்களோ, சிலர் ரணில் புராணம்பாட, சிலர் மரணிக்கும்போதும் அதே அமைச்சைக் கட்டியணைத்துக்கொண்டு மரணிக்க வேண்டும்; என்ற ஆசையில் அவ்வமைச்சை அனுபவிப்பதில் குறியாக இருந்தார்கள்.

இனவாதிகள் மெதுமெதுவாக தலைநீட்ட ஆரம்பித்தார்கள். அரசு அவர்களைக் கண்டுகொள்வதற்குமுன் நம்மவர்களே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இனவாதம் தம்வீரியத்தை மீண்டும் காட்டத்தொடங்கியது. அப்பொழுதுதாவது நம்மவர்கள் அரசுக்கு எச்சரிக்கைமணி அடித்திருந்தால் அரசு அப்போதே விழித்திருக்கும்.

அதன்பின் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காதபோதாவது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் அரசு காலைப்பிடித்திருக்கும். வெட்கமில்லாமல் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கே நடவடிக்கை எடுக்காத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அரசுக்குத் தெரியும் இவர்களின் தேவை என்னவென்று. எனவே, இனவாதத் தீயில் வெதும்பிய முஸ்லிம்களின் வேதனை விசும்பல்களை அரசு கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை.

இவர்களின் சோரம்போன தனத்தால் ஏற்பட்ட தைரியம் ஞானசாரவை அரசு விடுவித்தது. அப்பொழுதாவது நம்மவர்கள் உசாரடைந்தார்களா?

அரசின் இனவாதிகளுடனான தாராளப்போக்கு கிந்தோந்தோட்டையை தீயில் கருக்கியது. அப்போதாவது ஆகக்குறைந்தது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு அரசைவிட்டு வெளியேறாவிட்டாலும் பின்வரிசையிலாவது அமர்ந்தார்களா? அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன? என்றுதான் கவலைப்பட்டார்கள்.

அம்பாறை- கண்டி இனக்கலவரத்திற்கு யார் பொறுப்பு
———————————————————-
இந்த இனக்கலவரத்தை யாரோ திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம். சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாயிருந்த பிரதமர் அரசியல் ஆதாயத்திற்காக அதனை அனுமதித்திருக்கலாம். இனக்கலவரத்தைத் தூண்டியோர்தான் பொறுப்பு எனலாம். இல்லை அதை அனுமதித்த பிரதமர்தான் பொறுப்பு எனலாம். இல்லை இருதரப்புமே பொறுப்பு எனலாம். இந்தக்கூற்றுக்கள் எல்லாமே சரி. ஆனால் இவை எல்லாவற்றையும்விட மிகச்சரியான ஓர் உண்மை இருக்கின்றது. அது இதுவரை யாராலும் சுட்டிக்காட்டப்படாதது. எங்கே பிழை இருக்கின்றது; என்பதை சரியாக அடையாளம் காணாமல் அதற்குத் தீர்வுகாண முடியாது.

இன்று இந்நாட்டில் சகலரும் ஏற்றுக்கொள்ளுகின்ற, பேசுகின்ற ஒருவிடயம்தான் அரசு இதனைக் கட்டுப்படுத்தவில்லை; என்பது. ஏன் கட்டுப்படுத்தவில்லை? கடந்த ஆக்கத்தில் அதுதொடர்பாகப் பார்த்தோம். அது பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக பிரதமர் மெத்தனமாக நடந்துகொண்டது; என்பதாகும். இதைவிட பிரதமர் இவ்விடயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதற்கு வேறுகாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உள்ளூராட்சித்தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிக்க முனைவது அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கும் அதற்கடுத்த பொதுத்தேர்தலுக்குமாகும். எல்லா வாக்குஅதிகரிப்பு முயற்சியும் ஆட்சியைப்பிடிப்பதற்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஏற்கனவே பிடித்துவிட்டார். ஆட்சிக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. அவரிடம் சொந்த பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொரு நாளும்
தங்கியிருக்கின்றார். இன்று இருக்கின்ற ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் அவர் ஆட்சியைப் பிடிக்க பல ஆண்டுகள் செல்லலாம்; என்பது அவருக்கு தெரியாததல்ல. 2004ம் ஆண்டு அனுபவம் அவருக்கு இருக்கின்றது.

இந்நிலையில் நாளையத் தேர்தலுக்காக, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக, (அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக என்று வைத்துக்கொள்வோமே, ) இன்று முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஆட்சியை இழக்க விரும்புவாரா? குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா? இங்குதான் நாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். ஆனால் துணிந்து கட்டுப்படுத்தாமல் இருந்தார். தன் ஆட்சியைப்பற்றி அவர் பயப்படவில்லை.

ஏன் பயப்படவில்லை. அவருடைய ஆட்சி கவிழாது; என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்குகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏன் அவருடைய ஆட்சி கவிழாது. ஏன் அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்க்கமாட்டார். ஏனெனில் நம்மவர்கள் கண்டிப்பாக ஆட்சியைவிட்டு விலகமாட்டார்கள்; என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கமாட்டார்கள்; எனவும் அவருக்குத் தெரியும். அதுதானே இதுவரை நடந்தது. இப்பொழுதும் நடந்துகொண்டிருக்கின்றது.

எனவேதான் இனவன்செயலில் பாராமுகமாய் இருந்து முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்படக் காரணமானார். அவரது இந்த நிலைக்கு நம்மவர்கள் காரணமானார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு யார்பொறுப்பு?

சந்தேகமில்லாமல் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு. இதுவே மிகச்சரியான கூற்று; என்பேன்.

கள்வர்கள் நடமாடும் இடம் என நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெறுமதியான பொருளை எதுவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் அந்த இடத்தில் விட்டுவிட்டு வந்து, அப்பொருள் களவுபோனால் கள்வன் பொறுப்பா? பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்டு விட்டு வந்தவன் பொறுப்பா? கள்வன் குற்றவாளிதான். கள்வனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனை என்னவென்பது?

எனவே, தமது தொடர்ச்சியான கையாலாகத்தனத்தினால் பிரதமர் இனவாதிகளுடன் மெத்தனமாக நடக்க தைரியம் கொடுத்த, சந்தர்ப்பம் கொடுத்த நம் பிரதிநிதிகளே இந்த அழிவுகளுக்கு முதல் குற்றவாளிகள்; பொறுப்புதாரர்கள். இவர்கள் மாத்திரம் சரியாக நடந்திருந்தால் இந்த அழிவுக்கு பிரதமர் இடம் கொடுத்திருக்க முடியாது.

கண்டி இனக்கலவரத்தின் பின்
—————————————
நம்மவர்கள் சரியானவர்களானால், கண்டி இனக்கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பிரதமரின் மெத்தனப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். இதனைக் கூறும்போது பலரால் எழுப்பப்படுகின்ற கேள்வி, இவ்வாறான ஒரு காலகட்டத்தில் அரசை விட்டு வெளியேறுவது உசிதமானதா? அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது?, சில அமைச்சர்கள் கலவர சமையத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள்; அது சாத்தியப்பட்டிருக்குமா?

கலவர சமயத்தில் ஒருவர் சற்று ஆவேசமாக ஒரு அமைச்சரிடம் நீங்கள் ஏன் அரசைவிட்டு வெளியேறக்கூடாது; என்று கேட்க, இன்னொரு அரசு வந்தால் மாத்திரம் இவை நடைபெறாதா? என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒலிப்பதிவு சமூகவலைத்தளங்களில் வலம் வந்தது. இந்த அமைச்சரின் கூற்று எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு இனவாதிகளுடமிருந்து விடுதலையில்லை; எனவே இந்த அரசிலேயே இருந்துவிட்டுப் போவோமே அடியை வாங்கிக்கொண்டு; என்பதுபோல் இருந்தது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன?

மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்குரிய விடைகளை முதலில் பார்ப்போம்.

கேள்வி:இவ்வாறான காலகட்டத்தில் அரசைவிட்டு வெளியேறுவது உசிதமா?
பதில்: நாங்கள் அரசில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசுதான். அரசு கட்டுப்படுத்தாதன் காரணம் அரசிடம் அதற்குரிய மனம் இல்லாமல் இருந்தது. ( The Government did not have the resolve to arrest the situation in time).
நாங்கள் அரசில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்க அரசுக்கு அந்த மனம் இல்லை என்பது தெளிவாகி விட்டது. வெளியேறினால் அரசே கவிழ்ந்துவிடுமென்ற நிலையில் அரசுக்கு அதைக் கட்டுப்படுத்துகின்ற மனம் கண்டிப்பாக வந்திருக்கும். அரசு வேகமாக கட்டுப்படுத்தியிருக்கும்.

கேள்வி: அவ்வாறாயின் மீண்டும் மஹிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது?
பதில்: யாரும் அவ்வாறு கூறவில்லை. எதிர்க்கட்சியில் அமர்வதென்பது கட்டாயம் அரசைக் கவிழ்ப்பதென்பதல்ல. மாறாக, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு “நிபந்தனையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று ஒரு அறிவிப்பை விடுத்தால் அதன்பின் இன்றைய காலகட்டத்தில் அரச யந்திரம் நமது காலடியில் கிடக்கும்.

இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருந்துகொண்டு எவ்வளவோ சாதிக்கின்றது. காரணம் ஆபத்து வருகின்றபோது அவர்களின் ஆதரவு தேவை என்பது அரசின் நிலையாகும். ஆனால் நாம் சில அமைச்சுப்பதவிகளுக்காக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி செல்லாக்காசாகி சமூகத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றோம்.

கேள்வி: எதிர்க்கட்சியில் இருந்தால் அமைச்சர்கள் இவ்வாறு கலவரபூமியில் களமாட முடியுமா?
பதில்: களமாட வேண்டிய தேவையே வராது. ஏனெனில் அரசு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். தேவை ஒரு கண்டிப்பான உத்தரவு. ஜூலைக்கலவர வரலாற்றைப் படியுங்கள். தேவையானவரை கலவரம் செய்ய அரசு அனுமதித்துவிட்டு, போதும் என்று நினைத்தவுடன் ஒரு சில மணித்தியாலங்கள்கூட அதனைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவைப்படவில்லை.

இந்தப் பதில் ஒருபுறமிருக்க, ஏன் அமைச்சர் பதவி இல்லையென்றால் களமாடவே மாட்டார்களா? களமாடுவதற்காகவே அமைச்சர்களாக இருக்கப்போகின்றார்களா? சரி, களமாடி முடிந்து நிலைமைஓரளவு கட்டுப்பாட்டுற்குள் வந்தபின்பாவது கலவரத்தைக் கட்டுப்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்து நிபந்தனையுடனான ஆதரவைத் தெரிவுத்திருக்கலாமே!

கொஞ்சம்கூட வெட்க உணர்வில்லாமல், “ வெட்கமில்லையா அரசில் இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு, ( வெட்கமில்லாத உங்களுக்கு ஆடைகள் எதற்கு) ஆடைகளை களைந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றெல்லாம் மக்கள் கூறுகின்றார்கள்; என்று நம்மவர்கள் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு அரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது, “ வெட்கமில்லையா? என மக்கள் கேட்கின்றார்கள். உண்மையில் நாங்கள் வெட்கமில்லாதவர்கள்தான், எனவே அரசைவிட்டுப் போகமாட்டோம், பிரதமரே அஞ்சாதீர்கள்; என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நம்மவர்கள்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு
————————————————
பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த நிலையில் நம்பெறுமதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமரும் அரசும் நமது காலடியில் தவமிருந்திருக்கும். நமக்குத்தேவையான எத்தனையோ விடயங்களைச் சாதித்திருக்கலாம். இந்த அதிர்ச்சி வைத்தியம், இந்த அரசு மாத்திரம் அல்ல, எதிர்கால அரசும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தமுடியாது; என்ற செய்தியை வழங்கியிருக்கும்.

நாம் கொண்டுவந்த இந்த அரசை முட்டாள்தனமாக சாதாரணமாக இலகுவில் தூக்கிவீசிவிட முடியாது. இந்த அரசைக்கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். அதேநேரம் நாம் தூக்கிவீசிய மஹிந்த அரசை மீண்டும் அவ்வளவு இலகுவாக அரசுகட்டிலில் ஏற்றிவிடவும் முடியாது.

மறுபுறத்தில் நாம் செல்லாக்காசாக இந்த அரசில் தொடர்ந்தும் அமரவும் முடியாது. எனவே, நமது ராஜதந்திர நகர்வுகளில் ஒன்றுதான் எதிர்க்கட்சியில் அமர்ந்து நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது. அதுவும் பலனைத் தராவிட்டால் அடுத்ததாக அரசைக் கவிழ்பது பற்றியும் மாற்றுத்தெரிவு பற்றியும் சிந்திக்கலாம். நமது இலக்கு முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, உரிமையான அடைவுகள், என்பனவாகும்.

எனவே, தற்காலிகமாக, ஒரு ஆறுமாதத்திற்காவது எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கமுடியாதா? அந்த குறுகியகாலத்துள் நீங்கள் இழக்கப்போவது உங்கள் அமைச்சுச் சுகம் மாத்திரம்தான். சமூகத்திற்கான அடைவுகளோ ஏராளமாக இருந்திருக்கும்.

துரதிஷடவசமாக, சமூகத்தைவிட அமைச்சுப் பதவி முக்கியம். நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தவுடனே அறிவிப்பு வெளியாகிவிட்டது நம் தலைமைகளிடமிருந்து, பிரதமருக்குத்தான் நாங்கள் ஆதரவு என்று.?மட்டுமல்லாமல் கையொப்பமும் வைத்ததாக செய்தி.

கண்டியில் முஸ்லிம்கள் அடிபட்ட காயம் ஆறுவதற்குள் அடிக்கும்வரை பார்த்திருந்த பிரதமருக்கு ஆதரவு என்று பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. இது ஏற்கனவே, பிரதமருக்குத் தெரியும். அதுதான் ஆட்சியைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்கைத் தேடினார்.

தற்போது என்னசெய்வது
———————————
நமது செல்வங்கள் எதுவும் செய்யமாட்டார்கள்; பிரதமருக்கு ஆதரவாக கைஉயர்துவதைத்தவிர. அதேநேரம் தற்போது அதைத்தவிர வேறுவழியுமில்லை. இதுவரை அமைச்சர்களாக இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபின் அதனை ஆதரித்தால் மொத்த முஸ்லிம் சமூகமும் சந்தர்ப்பவாத சமூகமாகப் பார்க்கப்படலாம். மறுபுறத்தில் மாற்று ஏற்பாடு இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அரசைக் கவிழ்த்துவிட்டு அந்தரத்தில் அலையமுடியாது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வரமுன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இப்பொழுது நாம் மகாராஜாக்கள். வேண்டியதைக் கேட்டுப்பெற்றுக்கொண்டு பிரதமரைப் பாதுகாத்திருக்கலாம்.

இப்பொழுது பிரதமருக்கு ஆதரவளித்தால் அடிமைகள்; ஆதரவளிக்கவிட்டால் துரோகிகள். நம்மவர்கள் ஏற்கனவே அடிமைகளாக இருக்கத் தீர்மானித்து அறிவித்தும் விட்டார்கள். இனி எதுவும் செய்யவும் முடியாது. அடுத்த தேர்தலில் நம்மவர்க்கு மீண்டும் உசாராக வாக்களிக்கத் தயாராவோம். தோற்றுப்போன முஸ்லிம் அரசியலைத் தொடர்வோம்.
Previous Post Next Post