அமெரிக்காவில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, 50 மில்லியன் மக்களின் அரசியல் சார்ந்த தனியுரிமை (Privacy) தகவல்களை பொலிட்டிக்கல் டேட்டா ஃபர்ம் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica) திருடியுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் (CEO)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஸ்டீபன், கே. பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சரால் ஆகியோரால் நிறுவப்பட்டது.
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, டொனால்டு ட்ரம்ப்பின் அரசியல் பிரசாரத்திற்காக உதவும் வகையில் டொனால்ட் வெற்றி பெறுவதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள், தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட அரசியல் சார்ந்த தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அவர்களின் ஃபேஸ்புக் நண்பர்கள் பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பட்சத்தில், பிரைவசி ஆப்ஷனைப் பயன்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்த தனிப்பட்ட தகவல்களை, ‘சைக்கோகிராஃபிக் மாடலிங் டெக்னிக்ஸ்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியுள்ளது.
இவ்வாறு திருடப்பட்ட 50 மில்லியன் மக்களின் தனி நபர் சார்ந்த அரசியல் தகவல்களை டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரசாரத்தின்போது பயன்படுத்திக்கொண்டதாக, பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. இதையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக் நிறுவனத்தின் தலைமை அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.