( ஐ. ஏ. காதிர் கான் )
கொழும்பு மா நகரில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதே, தனது பிரதான இலக்காகும். பத்து வருட கால திட்டத்திற்குள் நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடனும் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என, கொழும்பு மா நகர சபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு முதல் பெண் மேயராக ரோஸி சேனாநாயக்க (19) பதவிப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர், கொழும்பு மா நகர சபையில் (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு கொழும்பை, தெற்காசியாவின் சிறந்த நகரமாக மாற்றுவேன். குடிநீர், மின்சாரம், மலசலகூட மற்றும் பொதுவசதிகள் என்பன இத்திட்டத்திற்குள் மேற்கொள்ளப்படும். வீடுகள் அற்ற குறைந்த வருமானமுள்ள யாவருக்கும் முழு அளவிலான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். பெண்களை வாழவைக்கும் உபாய மார்க்கம், தொழில்சார் பயிற்சி நிலையங்கள், சுகாதார வசதிகள் என்பனவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கொழும்பு மா நகர எல்லைக்குள் இயங்கும் 37 சுகாதார மத்திய நிலையங்கள், 2 கண் பரிசோதனை நிலையங்கள், 2 பற் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றை விரிவாக்கல் திட்டத்தின் கீழ் புதுப்பொழிவுடன் மேலும் நவீன வசதிகளுடன் திருத்தி அமைப்பதற்கும் நான் திட்டமிட்டுள்ளேன்.
இதுதவிர, குப்பைக்கூளங்கள் அகற்றல், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல், வீதிகளுக்கு மின்சாரக் குமிழ்கள் பொருத்துதல் போன்றவை தொடர்பிலும் எனது அவதானத்தைச் செலுத்தியுள்ளேன். குறிப்பாக, கொழும்பு நகரை, நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளடங்கிய அழகிய நகரமாக, அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட நகரமாக மாற்றியமைப்பதே எனது குறிக்கோளாகும்.
எனவே, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி, மூவின மக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு மா நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கும், நேர்மை மற்றும் செயற்திறன் மிக்க மா நகர சபையாக கொழும்பு மா நகர சபையை மாற்றியமைப்பதற்கும் கட்சி, இன, மத பேதங்களின்றி அனைவரது ஒத்துழைப்பும் இத்தருணத்தில் எனக்குத் தேவை.
முன்னைய ஆட்சி காலத்தின் போது கொழும்பு மா நகர சபையின் ஆட்சி ஐ.தே.க. வசம் இருந்தாலும், மத்திய ஆட்சி எம்மிடம் இருக்கவில்லை. தற்போது எம்மிடம் ஆட்சி உள்ளது. ஆகவே, கொழும்பு மா நகர சபையின் பிரச்சினைகளைத் தீர்த்து பலமான ஒரு பெரு நகரமாக, கொழும்பை நாம் உருவாக்குவதற்கு கை கோர்த்து நிற்போம் என்றார்.