( ஐ. ஏ. காதிர் கான் )
கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அம்பாறை நகரில் இடம்பெற்ற நாசகாரச் சம்பவங்களை அடுத்து, நேற்று முன் தினம் கண்டி, திகன பகுதியிலும் இவ்வாறான நாசகாரச் செயல்களை பெரும்பான்மையின வன்முறையாளர்களால் மிகப்பாரதூரமான முறையில்மேற்கொள்ளப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கண்டி - திகன பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில், அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள், தற்போது கண்டி மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள், வீடுகள், சொத்துக்கள் ஆகியன தாக்கப்பட்டும், பற்றவைக்கப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளன.
உண்மையில், இவ்வாறான சம்பவங்களை, யார் செய்தாலும் அது கண்டிக்கக்கூடியது. சில தீய சக்திகள், இனங்களுக்கு இடையே இவ்வாறான முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயலுகின்றன. நல்லாட்சியின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொலிஸார் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் மந்தமாகவே இருந்துள்ளனர். அவர்கள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார்கள் என்பதையே, இந்த வன்முறைச் சம்பவம் இவ்வளவு தூரத்திற்கு தலைதூக்க பிரதான காரணியாக அமைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இச்சம்பவம் இறுதியாக இருக்கட்டும் என அறிக்கை விடுவதை விட, இது முற்றுப்புள்ளியின் இறுதிக் கட்டமாக இருக்கவேண்டும். இச்சம்பவம் தொடர்பில், நாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து, தகுந்த நடவடிக்கைகளை, உரிய முறையில் எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் என்றார்.