
கண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காலத்தில் இராணுவ விசேட படைப் பிரிவில் ஊடுருவி தாக்குதல் நடத்தும் பிரிவுக்கு மாஹாசோஹோன் படைப் பிரிவு எனப் பெயரிடப்பட்டிருந்தது.
சிங்கள இளைஞர்களை கவர இந்த படைப் பிரிவின் பெயரில் சந்தேகநபர் அமைப்பொன்றை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமது அமைப்பை உருவாக்க சில அரசியல்வாதிகள் மற்றும் பிக்குகள் சிலரின் ஆதரவும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கள இனம் மற்றும் பௌத்த மக்களை பாதுகாப்பதற்காக செயற்படுவதாக கூறி, இந்த அமைப்பினர் சிங்கள வர்த்தகர்களிடம் நிதி சேகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பௌத்த வர்த்தகர்கள் தமது வர்த்தகத்தை சுதந்திரமாக மேற்கொள்ள வசதியாக ஏனைய இன வர்த்தகர்களை அச்சுறுத்தி, அவர்களின் வர்த்தக நிலையங்களை மூடவும் இந்த அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் வெற்றிகரமான மேற்கொண்டு வரும் வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்காக மஹாசோஹோன் அமைப்பினர் பௌத்த வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.