Top News

ஹாதியா திருமணம் செல்லும் இந்திய உயர் நீதி மன்றம் தீர்ப்பு



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சமுதாயம், குடும்பத்தினரை எதிர்த்து மதம் மாறி தான் செய்த திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய ஹாதியாவிற்கு மகளிர் தினத்தன்று சரியான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. பெண்கள் தங்களின் சுதந்திரத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போராடலாம் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறார் ஹாதியா.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அசோகன், பொன்னம்மா தம்பதியின் ஒரே மகளாக வளர்ந்தவர் அகிலா. அகிலாவின் பெற்றோர் இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர்கள். பள்ளிப்படிப்பை முடித்த அகிலா 2010ம் ஆண்டு சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

அங்கு தோழிகளான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஜெசீலா, ஃபசீனாவுடனேயே விடுதியில் இருந்து வெளியேறி தங்கிய அகிலா நாள்பட இஸ்லாமிய பழக்க வழக்கங்களை பின்பற்றத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து அகிலா ஹாதியாவாக மதம் மாறினார். தம்முடைய மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக அகிலாவின் தந்தை நீதிமன்றத்தில் முறையிட்டார். அகிலாவை மதமாற்றியதோடு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் முறையிட்டார். ஆனால் ஹாதியா தான் விரும்பியே மதம் மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் 2016 டிசம்பரில் ஹாதியா ஷஃபீன் ஜகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் செல்லாது என்று அறிவிக்க கோரி அகிலா என்கிற ஹாதியாவின் தந்தை அசோகன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியா திருமணம் செல்லாது என்று அறிவித்தது.

எனினும் ஜஹான் தன்னுடைய திருமணம் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த விவகாரத்தை என்ஐஏ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனெனில் மதமாற்ற திருமணத்தில் தீவிரவாதிகளின் சதி இருப்பதாக கூறப்பட்டதால் விசாரணையானது என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், என்ஐஏ என்று அத்தனையையும் தைரியமாக எதிர்கொண்டார் ஹாதியா. எனக்கு சுதந்திரமும் விடுதலையும் வேண்டும், என்னை பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்திருக்கின்றனர். படிப்பைத் தொடர விரும்புகிறேன் என்று தைரியமாக கோர்ட்டில் சொன்னார்.

இதனையடுத்தே நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சேலம் சித்த மருத்துவ கல்லூரியில் ஹாதியா படிப்பை தொடர்கிறார். எல்லா குடிமக்களும் அனுபவிக்கும் அடிப்படை உரிமையைத் தான் நான் கேட்கிறேன். அரசியலோ ஜாதியோ இதில் இல்லை. நான் விரும்பியவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று ஹாதியா நடத்திய சட்டப்போராட்டத்திற்கு சர்வதேச மகளிர் தினமான இன்று வெற்றி கிடைத்துள்ளது. ஹாதியா - ஷஃபின் ஜஹானின் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தந்துள்ளது.
Previous Post Next Post