அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப் படுகொலையை மியான்மர் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் ஆங் சான் சூகியி கண்ணை மூடிக் கொண்டு அமைதி காக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவர் மீதும், மியான்மர் அரசு மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 3 பேர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங் சான் சூகியும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் படுகொலை விவகாரத்தில் அவர் தொடர்ந்து அமைதி காத்து வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற ஈரான் நாட்டின் ஷிரின் எபாடி, ஏமன் நாட்டின் டவக்கோல் கர்மான், வடக்கு அயர்லாந்தின் மெய்ரெட் மகியுர் ஆகியோர் தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். வங்கதேசத்தில்தான் கிட்டத்தட்ட 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போதுதான் ஆங் சான் சூகியிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக ரோஹிங்கியா முஸ்லீம்களை குறி வைத்து மியான்மர் அரசுப் படையினர் கொன்று குவித்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லீ்ம்கள் நாட்டை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். ரோஹிங்கியா பெண்கள் மிக மோசமாக பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகி ன்றனர். ஆண்களும், குழந்தைகளும் கோரமாக கொல்லப்படுகின்றனர்.
சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தபோதிலும் கூட ஆங் சான் சூகியி இதைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளார். மியான்மர் அரசும் வாய் மூடி அமைதியாக உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங்சான் அமைதியாக இருப்பதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த படுகொலையைக் கண்டிக்க ஆங் சான் தவறியது நியாயமற்றது, குற்றத்திற்குத் துணை போகும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் டாக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த நோபல் பரிசு பெற்ற இந்த மூன்று பேரும் கூறுகையில், ஆங்சான் சூகியி தொடர்ந்து அமைதி காத்தால் அவர் மீதும், மியான்மர் அரசு மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
மியான்மர் அரசப் படையினர் நிகழ்த்தி வரும் கொடூரக் குற்றச் செயல்களுக்கு ஆங்சான் துணை போகக் கூடாது. உடனடியாக அதைத் தடுக்க களம் இறங்க வேண்டும் என்று கூறினர்.