Top News

பௌத்தசிங்கள மக்கள், எப்படி ஏமாறுகிறார்கள் தெரியுமா?



இனவாத யுத்தத்தால் 3 தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட இந்த நாட்டை மீண்டும் மதவாத யுத்தத்தில் தள்ளும் முயற்சிகளை கடந்த வாரங்களாக அவதானிக்க முடிந்தது. முஸ்லிம் நபரொருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் கருத்தடை மாத்திரை கலந்த உணவு வழங்கப்பட்டதாக கூறி அந்த ஹோட்டலுக்கும் அருகிலிருந்த பள்ளிவாசலுக்கும் மற்றும் சில இடங்களுக்கும் தாக்குதல் நடாத்தப்பட்டன.

சிங்கள, பௌத்தர்களை மலடாக்குவதற்கு முஸ்லிம்கள் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக 2012-2013 காலப்பகுதியில் பொதுபல சேனாவை சேர்ந்த தேரர் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார். முஸ்லிம் கடை உரிமையாளர்கள் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உள்ளாடைகளை விற்பனை செய்வதாகவும் சிங்கள யுவதிகளை இஸ்லாமிய மார்க்கத்தை தழுவச் செய்து அந்தப்புரங்களில் சிறைப்படுத்துவதாகவும் பொதுபலசேனா உள்ளிட்ட கடும்போக்குவாதிகள் குற்றம்சாட்டினார்கள்.

பொதுபல சேனாவுக்கும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்குமிடையில் நெருங்கிய உறவுகள் காணப்பட்டமையினால் இந்தக் கட்டுக்கதைகளின் யதார்த்தத்தை அம்பலப்படுத்துவதற்கு பலர் அச்சப்பட்டார்கள். ஆனால் இன்று அவ்வாறானதொரு சூழல் இல்லை. இதனால் மலட்டு வில்லை (கருத்தடை மாத்திரை) என்ற ஒன்று உலகில் எங்காவது உள்ளதா? இல்லையா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக இந்த விடயத்தில் வைத்திய நிபுணர்களுக்கு மிக முக்கிய பொறுப்புள்ளது.

கருத்தடை மாத்திரை தொடர்பில் இணையதளத்தை பரீட்சித்துப்பார்க்கும் பொழுது அவ்வாறானதொரு கண்டுபிடிப்பு இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற விடயம் ஊர்ஜிதமானது. ஆண்கள் அல்லது பெண்களை அல்லது பிறிதொரு விலங்கினத்தை உடனடியாக மலட்டுத்தன்மையடையச் செய்யக்கூடிய மாத்திரையோ குடிபான வகையோ இதுவரையில் உற்பத்திசெய்யப்படவில்லை. மனிதன் உள்ளிட்ட விலங்குகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற சத்திரசிகிச்சைகளினூடாகவே அந்த விடயத்தை செய்ய முடியும்.

கருத்தடை மாத்திரை, மலடாக்கும் உள்ளாடைகள் பற்றிய மூடநம்பிக்கைகள் தொடர்பில் நாட்டிற்கு உண்மையைச் சொல்லும் பொறுப்பு வைத்தியர்களுக்கு உள்ளது. எனினும் கருத்தடை மாத்திரை என்றொரு விடயம் இல்லை என்பதை தெரிவிப்பதற்கு ஒருசில வைத்தியர்களே முன்வந்துள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தில் (GMOA) உப தலைவர் ஒருவர் இருந்தும் கூட அந்தச் சங்கத்தினாலோ மருத்துவ சபையினாலோ உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அம்பாறை பிரதேசத்தில் மதக்கலவரம் இடம்பெற்ற போதிலும் கலவரக்காரர்கள் மருத்துவ விஞ்ஞானத்துடன் தொடர்பான விடயமொன்றையே அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள். இதனால் கருத்தடை மாத்திரையின் உண்மைத்தன்மை குறித்து நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு மருத்துவ துறைக்கு உள்ளது.

இந்த விடயம் இடம்பெறாத வரை மருத்துவத்துறையுடன் சம்பந்தப்பட்ட அழிவுகரமான மூட நம்பிக்கை நாட்டில் பரவுவதை தடுக்க முடியாமல் போகும். இலங்கையின் பெரும்பான்மையான வைத்தியர்களின் மௌன நிலைப்பாட்டின் காரணமாக கருத்தடை மாத்திரை என்னும் போலி நம்பிக்கையை சமூகத்தில் பரப்பி நாட்டை மீண்டும் யுத்தத்தில் தள்ள கங்கனம்கட்டும் தீய சக்திகளுக்கு இந்த விடயம் சாதகமாய் போயுள்ளது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு பாதிப்பாக அமைவதுடன், மருத்துவ துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயமாகவும் அமைந்துள்ளது.

மறுபுறத்தில் அரசாங்கத்தின் இயலாமையும் இந்தப் போலிநம்பிக்கை பரவலடைய உந்துசக்தியாய் அமைந்துள்ளது. கருத்தடை மாத்திரை என்றொரு விடயம் இலங்கையிலோ உலகத்திலோ இல்லை என்பதை நாட்டிற்கு தெளிவுபடுத்த அரசாங்கம் சார்பில் ஒருவரும் முன்வரவில்லை. கருத்தடை மாத்திரை சம்பவம் இடம்பெற்றவுடன் ஊடகங்களை கூட்டி கருத்தடை மாத்திரை என்றொன்று இல்லை என்பதை சுகாதார அமைச்சு அல்லது சுகதாதாரத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

சிறிசேன விக்ரமசிங்க அரசாங்கத்தில் பல்வேறு தவறுகள் காணப்பட்ட போதிலும் அது இன,மதவாத அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. என்றாலும் அரசாங்கம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இன, மதவாதத்திற்கு எதிராக தெளிவான நிலைப்பாடுகளை எடுக்கத் தவறியுள்ளது. கலகொடஅத்தே ஞானசார தேரரின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளித்துவிட்டு அரசாங்கம் கண்டும் காணாமலுமுள்ளது. 2013இல் அளுத்கம பகுதியில் தீமூட்டியர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அதரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

கருத்தடை மாத்திரையும் போலிச்செய்திப் பரவலும்

1999இல் அமெரிக்காவில் உருவான அநாமதேய ஈமெய்ல் செய்தியொன்றின் மூலமே கருத்தடை மாத்திரை விடயம் ஆரம்பித்தது. பெண்களை மானபங்கப்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதற்கு ஒருசில துஷ்பிரயோகிகள் Progesterex என்னும் மாத்திரையை பயன்படுத்துவதாகவும் இதன் மூலம் பெண்கள் நீண்டகால மலட்டுத்தன்மைக்கு உள்ளாவதாகவும் அந்த ஈமெயில் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 குதிரைகளை மலடாக்குவதற்கு மிருக வைத்தியர்கள் இந்த Progesterex மாத்திரையை பயன்படுத்துவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் மிருக வைத்திய அமைப்புக்கள் இந்தக் கதை போலி என்பதை அம்பலப்படுத்தியிருந்தன. அம்பாறை சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்தடை மாத்திரையின் வரலாறே இது.

கருத்தடை மாத்திரை என்பது நிஜ உலகில் காணக்கூடியதொன்றல்ல. அது அறிவியல் ரீதியான உண்மையுமல்ல. இதுவொரு உண்மையான செய்தியுமல்ல. இது Fake news வகையைச் சார்ந்ததாகும். செய்தி எனும் பெயரில் போலியை சமூகமயப்படுத்துவதே போலிச்செய்தியாகும். 2016ஆம் ஆண்டு டிசம்பரில் உருப்பெற்ற pizza-gate சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம். அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள Comet ping pong என்னும் பீட்சா உணவகத்திற்குள் ஹிலரி கிளின்டனுக்குச் சொந்தமான சிறுவர் துஷ்பிரயோக நிலையமொன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பிரசாரம்செய்யப்பட்டது. இந்தச் செய்தியை நம்பிய ‘எடியா வெல்ச்’ என்னும் 28 வயதையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை வட கரோலினாவிலிருந்து 350 கிலோமீற்றர் தூரத்தை கடந்து வொசிங்டன் வந்து Comet ping pong பீட்சா உணவகத்திற்கு துப்பாக்கிச் சூடு நடாத்தினார். ஆனால் இந்த உணவகத்தில் சிறுவர் துஷ்பிரயோக நிலையமொன்று காணப்படவில்லையென பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்தது. போலிச் செய்தி காரணமாக வன்முறை உருப்பெரும் விதத்தை இந்த pizza-gate சம்பவத்தினூடாக விளங்க முடிகிறது.

கருத்தடை மாத்திரை / கருத்தடை ஆடை போன்ற மூட நம்பிக்கைகளைப் போன்று இந்நாட்டில் சிங்கள இனமும் பௌத்த மதமும் அழிந்து செல்வதாக மற்றுமொரு போலிச்செய்தி சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக இணையதளமொன்றில் கடந்த மார்ச் 2ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த செய்தியொன்றை குறிப்பிட முடியும். ‘சிங்கள பௌத்தர்கள் 67வீதமாக குறைவு, சிங்களவர்கள் பயந்து தோழ்வியுற்ற சமூகமாக மாற்றம்’ என்ற தலைப்பிலான செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘சில தசாப்தங்களுக்கு முன்பு 72 சதவீதமாக காணப்பட்ட இந்நாட்டின் சிங்கள பௌத்த சனத்தொகை தற்பொழுது 67 சதவீதமாக குறைந்திருப்பதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுத்தியுள்ள மிகப்பெரியளவிலான திட்டத்தின் காரணமாக இந்த நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்’.

நாட்டின் சனத்தொகை தொடர்பில் உண்மையான தகவல்களை குடித்தொகை தொகைமதிப்பீட்டு புள்ளிவபரவியல் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 1881ஆம் ஆண்டிலேயே இலங்கையில் முதலில் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக 2012இல் இடம்பெற்றது. பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறையே சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் அடுத்த கணிப்பீடு 2022இல் இடம்பெறும். இதனால் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பை எமக்கு ஆதாரமாக கொள்ள முடியும். 2012ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின் படி இந்நாட்டின் சிங்களவர்களது மொத்த சனத்தொகை 74.9 வீதமாகும். இந்தத் தொகை 1881ஆம் சனத்தொகை கணக்கெடுப்பு முதல் 2012 வரையில் மேற்கொள்ளப்பட்ட சகல கணக்கெடுப்பிலும் பதிவான அதிகூடிய தொகையாகும்.

(பார்க்க அட்டவணை 01)
சனத்தொகை வருடம்              சனத்தொகை (சிங்களம்)                சனத்தொகை (பௌத்தம்)
1881                                                     66.91                                                           61.53
1891                                                     67.86                                                           62.4
1901                                                     65.36                                                           60.06
1011                                                     66.13                                                            60.25
1921                                                     67.05                                                           61.87
1931                                                     65.45                                                           61.55
1946                                                    69.41                                                            64.51
1953                                                    69.36                                                            64.33
1963                                                    71.00                                                            66.18
1971                                                     71.96                                                             67.27
1981                                                     73.95                                                            69.3
2012                                                    74.9                                                               70.71

இந்தத் தரவுகளின் மூலம் சில விடயங்கள் தெளிவாகின்றன. ஒன்று 1881ஆம் ஆண்டு முதல் 2012 வரையில் இந்நாட்டின் சிங்கள சனத்தொகை 1.89 வீதத்தினாலும் பௌத்தர்களின் சனத்தொகை 8.57 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இரண்டாவது, 1881 முதல் 1946 வரையில் சிங்கள மற்றும் பௌத்த சனத்தொகை சிறியளவில் குறைந்து கூடியிருந்தாலும் 1953 முதல் 2012 வரையில் அந்தத் தொகை தொடர்ந்தேர்ச்சியான அதிகரிப்பை காட்டியுள்ளது.

இதன் மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள, பௌத்தர்கள் இந்நாட்டில் அழிவுக்கு உட்பட்டு வருவதாக சில கடும்போக்கு சக்திகள் கூச்சலிடுவது, மூடநம்பிக்கையும் போலிச்செய்தியுமேயன்றி அது உண்மையான தகவலல்ல என்பதாகும். மேற்படி தரவுகளினூடாக தெளிவாகும் மற்றொரு விடயம் என்னவெனில் சில தசாப்தங்களுக்கு முன்னர் இந்நாட்டில் 72 வீதமாக காணப்பட்ட சிங்கள பௌத்த சனத்தொகை தற்பொழுது 67 வீதமாக குறைந்திருப்பதாக Lanka C News இணையதளத்தில் தென்மாகாண ஆளுநர் கூறியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி முழுமையானதொரு போலிச்செய்தி என்பது நிரூபணமாகிறது. இந்நாட்டின் சனத்தொகை வரலாற்றில் பௌத்தர்களின் சனத்தொகை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 72 வீதமாக காணப்படவில்லை. 1981 வரையில் இந்நாட்டின் பௌத்தர்களின் சனத்தொகை 70 வீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. 2012இல் மாத்திரமே இந்நாட்டின் பௌத்த சனத்தொகை 70 வீதத்தை தாண்டியது.

இந்த அடிப்படையிலேயே மக்கள் உள்ளங்களை நாசப்படுத்துகின்ற நாட்டை வன்முறையின் பக்கம் தள்ளுகின்ற போலிச்செய்திகள் உருப்பெருகின்றன. முன்னேற்றமடைந்த நாடுகளில் இவ்வாறான போலிச்செய்திகளின் நம்பகத்தன்மையை பரீட்சிப்பதற்கு பல்வேறு தகவல் பரீட்சிப்பு (Fack Checking) முறைகள் அமுலில் உள்ளன. எமது நாட்டில் அவ்வாறான முறைமைகள் இல்லாமையினால் யார் எதைச்சொன்னாலும் அது தொடர்பில் நாம் ஆழமாகச் சிந்தித்து, அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களுக்கூடாக அவற்றின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். ‘கியன்னா கெஸே கீவத், அஸன்னா சிஹிபுத்தியென் எஸிய யுதுய’ (சொல்பவர் எதைச்சொன்னாலும், செவிமடுப்பவர் அறிவுபூர்வமாக செவிமடுக்க வேண்டும்)


திஸரணீ குணசேகர + By Isbahan Sharfdeen-
Previous Post Next Post