Top News

அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை



பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் - அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை.


(அகமட் எஸ். முகைடீன்)

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டி ஏற்படுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (7) புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்ட எச்சரிக்கையினை விடுத்தார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மீண்டும் இந்த நாட்டில் இன்னுமொரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த சபையில் நான் பேசிக்கொண்டிருக்கின்றபோதும் கூட கண்டி பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இன வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் சேதமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  
 
இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிராக இனவாத வன்முறைகளை தோற்றுவிக்கின்ற குழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட மூலங்களைக் கொண்டுவர வேண்டுமென்று நான் உள்ளிட்ட இந்த நாட்டின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் பெரும்பான்மை தேசிய கட்சிகளின் சில பிரதிநிதிகள் இந்த நல்லாட்சி அரசுக்கு பல முறை கூறியிருந்தோம்.  

குறிப்பாக மதங்களுக்கு எதிரான மத நிந்தனைச் சட்டம், அதேபோன்று மதஸ்தளங்களை தாக்குகின்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலான சட்டம், இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தனி நபர்கள் மற்றும் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் போன்ற பல சட்டமூலங்களைக் கொண்டுவந்து இவ்வாறான இனவாத செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்று பல முறை இந்த சபையிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் கூறியிருக்கின்றோம்.  

ஆனால் அவ்விடயத்தில் இந்த நாட்டின் அரசும் அதன் தலைமையும் கவனையீனமாக இருந்ததனால் இன்று இன வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காத அளவுக்கு நடைபெறுகின்றன. அம்பாறை நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டபோதிலும் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அசமந்தமாக செயற்பட்டதனால் அந்த அநீதிகள் இடம்பெற்றன. 

அம்பாறைச் சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான இனவாதத் தாக்குதல் சம்பவங்கள் ஏனைய பிரதேசங்களில் நடைபெறாமல் பாதுகாப்பதற்கும் குறித்த இனவாத தாக்குதலுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பிரதமர் அம்பாறை நகருக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கமைவாக கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறைக்கு வருவதாக இருந்தது, அதற்கு அம்பாறையில் இருந்த ஒரு அமைச்சர் தடையை ஏற்படுத்தினார். 

பாதிக்கப்பட்ட அம்பாறை பிரதேசத்திற்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசலை பார்வையிடுவதற்கு கூட பிரதமருக்கு தைரியமில்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்தும் கொடுத்த அழுத்தம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (04) ஒலுவில் பிரதேசத்திற்கு துறைமுக அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து அங்கு எமது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார். 

இதன்போது இவ்வாறான கோரத்தனமான இனவாதத் தாக்குதல்கள் அம்பாறையுடன் முடிந்துவிட வேண்டும், திகன பிரதேசத்தில் இனவன்முறைச் சம்பவம் ஏற்படும் வகையிலான ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதாக எனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது எனவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அப்பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று கூறியிருந்தோம். ஆனால் பிரதமர் எவ்விதமான நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, அதற்கு அடுத்த நாள் கண்டி பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைச் சம்பவங்கள் தோற்றுவிக்ப்பட்டன.  

நான்கு முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலால் சிகிச்சை பலனின்றி சிங்கள இளைஞர் உயிரிழந்தார். குறித்த முஸ்லிம் இளைஞர்கள் செய்த அந்த கொடூரத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அந்த பெரும்பான்மை சகோதரர் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார். அதை நியாயப்படுத்த எந்தக் கட்டத்திலும் நாங்கள் தயாரில்லை. ஆனால் அந்த விடயத்தை மையமாக வைத்து இனவாத குழுக்கள் திகன நகரில் காட்டுமிராண்டித் தனமாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். 

குறித்த பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நான் அன்றிரவே சென்றிருந்தேன். அங்கு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் வியாபார ஸ்தலங்கள் அழிக்கப்பட்டிருந்தன. ஒரு முஸ்லிம் இளைஞரும் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இப்பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தால் இப்பேரழிவு ஏற்படுவதனை தடுத்திருக்க முடியும். 

தற்போது ஜனாதிபதி அவசரகால சட்டத்தை ஏற்படுத்திய பின்னர் இராணுவம் உள்ளிட்ட ஏனைய படைகள் அப்பிரதேசங்களில் முகாமிட்டிருக்கின்றன. இருந்தபோதிலும் நேற்று இரவும், தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற போதும் கூட கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் மிகப் பெரிய கொடூரத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக காடுகளுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களில் சரியான பாதுகாப்பு முறைமைகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு முழுப் பொறுப்பினையும் இந்த அரசு எடுக்க வேண்டும் என்பது எமது சமூகத்தின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. 

இந்த நாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ்  போன்ற பெரும் படைகளை வைத்திருக்கின்ற இவ்வரசு ஒரு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்வதற்கு ஏன் தயங்கியது?, அல்லது வேண்டுமென்று தங்கெழுக்கு எதிராக வந்திருக்கின்ற நம்பிக்கை இல்லாப் பிரேரனை அதேபோன்று மத்திய வங்கி குற்றச்சாட்டுகளை வேறு திசைக்கு மாற்றுவதற்காக இவ்வாறான இனக்கலவரங்கள் அரசுக்கு தேவைப்படுகின்றதா? என்று எமது முஸ்லிம் சமூகம் சந்தேகப்படுகின்றது.

யுத்தத்தினால் பெரும் அனுபவம் கொண்ட இந்நாட்டில் ஒரு வன்முறை இடம்பெறப்போகின்றது எனும்போது, தற்போதுள்ள நவீன வசதிகளுக்கேற்ப ஜி.பி.எஸ் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் இருக்கின்ற பிரதேசங்களையும் பள்ளிவாசல்களையும் இலகுவில் அடயாளங் கண்டு ஆயிரக் கணக்கான படைவீரர்களை ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசங்களுக்கு அனுப்பி அம்மக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாக்கின்ற வாய்ப்பு இந்த நாட்டின் அரசுக்கு இருந்தது. ஆனால் ஏன் இதைச் செய்ய தவறியுள்ளார்கள் என்பதுதான் எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது. 

நேற்று கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் எதிர்ப்பு நடவடிக்கையில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டார்கள். அகிம்சையை பேணுகின்ற முஸ்லிம் இளைஞர்களும் பொதுமக்களும் இன்று கட்டுக்கடங்காமல் கற்கலை கையில் எடுத்திருக்கின்றார்கள், நாளை அது ஆயுதங்களாக மாறுகின்ற சூழ்நிலை வந்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சபா பீடத்திற்கு முன்பாக அமர்ந்து போராடியபோது அதனை ஏழனமாக பார்த்தார்கள், ஆளுங்கட்சியில் இருக்கின்ற பல அமைச்சர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது, எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறினார்கள். ஆனால் நடந்ததென்ன?, அன்று நாங்கள் போராட்டம் நடத்திய ஓரிரு மணித்தியாலங்களின் பின்பு மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்பட்டது, மெனிக்கின்ன பிரதேசத்தில் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டது, அதேபோன்று அக்குறனை, அம்பத்தெனிய, கடுகஸ்தோட்ட என்று கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இனவாத வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு நிலமையில் இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வெக்கமாகமடைகின்றேன்.

எங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு எம் சமூக இளைஞர்கள் கோருகின்றனர். இன்று அரசியல் ரீதியாக நாம் நிர்வாணப்படுத்தப் பட்டுள்ளோம். அந்த அளவுக்கு இன்று நிலமை மாறி இருக்கின்றது. இந்த நாட்டின் நாலாபுறமும் இருக்கின்ற முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடைய அதி உச்ச அதிகாரத்தைக் கொண்டு படைகளுக்கு அதிகாரங்களைக் கொடுத்து இந்த சிறுபான்மை சமூகங்களை பாதுகாருங்கள். இல்லாதுபோனால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை வருகின்றபோது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வரும் என்பதை எச்சரிக்கையாக இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 
Previous Post Next Post