கண்டி நிர்வாக மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (05) பிறப்பிக்கப்பட்ட இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கண்டி, தெல்தெனிய பகுதியில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தால் இன்று (06) அப்பகுதியில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மோதல் சம்பவமே, நிலமை மோசமடைய காரணம் எனவும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி.... பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.