இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய சுதந்திரக்கட்சி, நடந்தது என்ன?

NEWS


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று ஒன்று கூடி இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.

கொழும்பில் உள்ள அமைச்சர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அதாவது பிரதமரை தோற்கடிக்கும் வகையில் வாக்களிப்பது என இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்த யோசனையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன, ஏ.எச்.எம். பௌசி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, லக்ஷ்மன் வசந்த பெரேரா,நிஷாந்த முத்துஹெட்டிகம, காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவிருந்த போதிலும் அவர் அதில் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பின்னர் புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் பிரதமராக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறியுள்ளார்.
6/grid1/Political
To Top