இக்பால் அலி
கண்டி மாவட்டத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையின் போது வன்முறையினால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுடைய சேத விபரங்களையும் நாளை திங்கட் கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை காலை 9.00 முதல் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இருந்தும் இரு நிர்வாக உறுப்பினர்கள் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரியூட்டப்பட்ட மற்றும் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு சேத விபரங்களைப் பெற்று துரித கதியில் நஷ்டயீடு வழங்குவதற்குகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண்ணாடிகள், கதவுகள், யன்னல்கள், ஒலிபெருக்கிகள் சேதம் விளைவித்தல் கட்டிடத்தின் எந்தப் பகுதிகள் சேதம் அடைந்திருந்தாலும் அனைத்துக்கும் சேத விபரங்கள் பதியப்பட்டு நஷ்யீடு வழங்கப்படவுள்ளது. எனவே பாதிப்புக்குளான பள்ளிவாசல்களின் தரப்பில் இருந்து இரு நிர்வாக உத்தியோகதஸ்தர்கள் கட்டாயமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மாவட்ட செயலாளர் ஹிட்டிசேகர உட்பட கண்டி பிரதேசத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் . கிராம உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.