Top News

பாகிஸ்தானுடனான கல்வி ரீதியான தொடர்பை வலுப்படுத்த உயர் கல்வி அமைச்சருடன் ஹிஸ்புல்லாஹ் பேச்சு



பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று சனிக்கிழமை பாகிஸ்தானின் உயர் கல்வி மற்றும் நிபுணத்துவ பயிற்சி அமைச்சர் முஹம்மத் பாலிஹ் உர் ரஹ்மானை  (muhammad baligh ur rehman) சந்தித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 

பாகிஸ்தான் நாட்டின் 78ஆவது தேசிய தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று சனிக்கிழமை காலை இஸ்லாமாபாத் நகரில் அமைந்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் வைத்து மேற்படி கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக உள்ள கல்வி ரீதியிலான உறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.  

தற்போது இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் மருத்துவ பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் கோட்டாவை மேலும் அதிகரிக்குமாறு இதன்போது கோரிக்கை விடுத்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மருத்துவ துறை மாத்திரமல்லாது பொறியியல் துறைக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 
Previous Post Next Post