அகமட் எஸ். முகைடீன்
சூறாவளி தாக்குதலால் பாதிப்புக்குள்ளான கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கும்வகையில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் இன்று (2) வெள்ளிக்கிழமை குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் செய்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்றைய (1) தினம் குறித்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்;குவதற்கும் பாதிப்புக்குள்ளான வீடுகளை திருத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைவாக மேற்படி உயர்மட்டக் குழுவினர் இக்கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த உயர் மட்டக் குழுவினர் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியுள்ள பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலத்திற்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவகைள் தொடர்பில் கேட்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் திருத்தியமைக்கும் வரையில் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ததோடு அவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்ட வீடுகளை விரைவாக புணரமைப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரிகள், உள்ளிட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.