பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதத்திற்கு முன்னர் பிரதமரே தனது பதவியினை துறக்க வேண்டும். இல்லையேல் நான்காம் திகதி இரவு 9 மணியுடன் தேசிய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.
நல்லாட்சியை காப்பாற்ற வேண்டுமா அல்லது தனது பதவியை காப்பாற்ற வேண்டுமா என்பதை பிரதமர் தீர்மானிக்க வேண்டும், அதற்கு இரண்டு நாட்கள் காலக்கெடு கொடுப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
சிரேஷ்ட உறுப்பினர், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறுகையில்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது நியாயமான அடிப்படை நிலைப்பாடுகளை கொண்ட காரணிகளை உள்ளடக்கியே முன்வைக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தின் கட்சி நிலைப்பாடுகளை அவதானித்தால், பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 ஆசனங்கள் உள்ளன. ஏனையவை கூட்டுக் கட்சிகளின் ஆசனங்களாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 95 ஆசனங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 82 ஆசனங்களும் கூட்டணி கட்சிகளுக்கு ஏனைய ஆசனங்களும் உள்ளன. ஆகவே பாரளுமன்றத்தில் தனிக் கட்சி அங்கீகாரம் என்று பார்க்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஆசன எண்ணிக்கை சமமாகவே உள்ளது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதனைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் அடுத்த இடங்களில் உள்ளன. இதனை கொண்டே நான்காம் திகதி வாக்கெடுப்பிலும் தீர்மானங்கள் அமையப்போகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்ட தீர்மானம் ஊடாக நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க முடியாது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் என்னவென்பது குறித்து கேள்வி எழுகின்றது. மத்திய வங்கி ஊழல் விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தக் குழு 15 காரணிகளை முன்வைத்தது.
அதற்கமையவே ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இதனைக் கொண்டே இப்போது நம்பிக்கையில்லா பிரேரணை வரையில் வந்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகளில் 13 காரணிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சுட்டிக்காட்டிய விடயமாகும். ஆகவே ஒருபோதும் எம்மால் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க முடியாது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசாங்கம் தோற்றால் ஜனாதிபதியும் இல்லை, பிரதமரும் இல்லை சபாநாயகரே பொறுப்புக்களை கையாள வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இவர்களின் கருத்துக்கள் எந்தவித அடிப்படையும் இல்லாதவையாகும். அரசியல் அமைப்பு என்னவென்பது தெரியாத நபர்களாலேயே இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க முடியும். அரசியல் அமைப்பின் 46 ஆம் அத்தியாயம் இரண்டாம் சரத்தில் இந்த விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியாது. அமைச்சரவை பிரதானி என்ற வகையில் அவரை நீக்கிவிட்டு அரசாங்கத்தை எவ்வாறு கொண்டுசெல்ல முடியும்.? ஆகவே யதார்த்தமாக நடைபெறும் காரியங்களை மாத்திரமே நாம் பேச வேண்டும்.
மேலும் இப்போது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த கட்சிகளின் நிலைமைகளை கருத்தில் கொண்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 44.6 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 32.5 வீத வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 9.8 வீத வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3.6 வீத வாக்குக்களுமாக மொத்தமாக 14.2 வீத வாக்குகளும், ஜே.வி.பி க்கு 6 வீத வாக்குகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 3 வீத வாக்குகளும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரேரணையை ஜே.வி.பி ஆதரிப்பதாக கூறியுள்ள நிலையில் மொத்தமாக 51 வீத மக்கள் ஆதரவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்தால் மொத்தமாக 65 வீதமான வாக்குகள் பிரதமரை எதிர்க்கும் அணியில் உள்ளன. ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பிரதமர் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா கூறுகையில்.
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஊடகங்கள் முன்னாள் வந்து கருத்துக்களை முன்வைக்காது விடயம் குறித்து ஆராய்ந்து ஒரு தீர்மானம் எடுக்கவே நாம் முயற்சித்து வந்துள்ளோம். இதில் சட்ட நகர்வுகளுக்கு அப்பால் அரசியல் ரீதியிலும் சரியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுவே மக்களின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு அமையயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானங்களை கொண்டுள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க நாம் அனைவரும் இணைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கம் பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்க வேண்டும் என்றால் உடனடியாக நாட்டு மக்கள் அறிய பிரதமர் பதவி விலக வேண்டும்.
கடந்த கால ஆட்சி நகர்வுகளை பார்க்கையில், கோப் குழுவின் அறிக்கையினை, சாட்சியங்களை மற்றும் மக்களின் நிலைபாட்டினை பார்க்கையில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை சாதாரணமான ஒன்றாகும். இதில் தவறு கூறும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை எம்மால் எதிர்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியிலான் கூட இதனை எதிர்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் பலரும் மத்திய வங்கி விடயத்தில் நியாயமான கருத்துக்களை முன்வைத்தனர். ஆகவே அவர்களும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க முடியாது. எனவே கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் என்றால் உடனடியாக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லையேல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டு அரசாங்கத்தை நிராகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிமையை ஏற்படும் எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னெடுத்த தீர்மானங்களை, வெளிபடுத்திய தகவல்களை உள்ளடக்கிய வகையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவினர் முன்வைத்த 15 காரணிகளில் 13 காரணிகள் நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை இனியொருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரிக்கும் தீர்மானமும் இல்லை. எனினும் ஒரே ஒரு மாற்றுவழியை நாம் கூறுகின்றோம். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர இன்னும் காலம் உள்ளது. அதற்கு முன்னர் இன்றோ நாளையோ பிரதமர் நிலைமைகளை விளங்கிக்கொண்டு பதவியை துறப்பார் என்றால் தொடர்ந்தும் நல்லிணக்க அரசாங்கம் முன்னெடுக்கப்படும். சகல தரப்பினரும் ஒரே காரணியை முன்வைக்கும் நிலையில் பிரதமர் சரியான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும். பிரதமர் மீது தனிப்பட்ட கோபங்களோ பழிவாங்கல்களோ எதுவும் இல்லை. அவர் சிறந்த அரசியல் வாதி, கற்ற மனிதர், எனினும் அவரது தலைமைத்துவத்தின் கீழான அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. ஆகவே அவரது பதவியை துறக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் சகலரதும் நிலைப்பாடாகும் உள்ளது.
அவர் பதவியை துறக்காவிட்டால் இப்போது நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை இறுதிவரை கொண்டுசெல்வோம். இரண்டாம் திகதி நாம் வெளிப்படுத்தும் இறுதி தீர்மானமும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவே இருக்கும். நாம் தேசிய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கின்றோம். அதேபோல் மக்களின் நிலைப்பாட்டினையும் கவனத்தில் கொண்டே தீர்மானம் எடுக்கின்றோம். பிரதமரை நீக்கிவிட்டு எஞ்சியுள்ள ஒன்றரை ஆண்டுகாலம் நாட்டில் ஜனநாயக ரீதியில் பயணங்களை முன்னெடுக்க முடியும். மிகச் சரியான ஆட்சியினை நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே நல்லாட்சி தொடர வேண்டும் என்றால் அதில் இறுதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு இருக்க வேண்டும் என்றால் பிரதமரை உடனடியாக நீக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடியாது. ஆகவே இப்போது நாம் கொடுத்துள்ள கால அவகாசத்தில் பிரதமரே பதவியை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நான்காம் திகதி இரவு 9 மணியுடன் நல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஆகவே . நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற்றால் நல்லாட்சி முடிவுக்கு வரும் என்பது உறுதி எனக் குறிப்பிட்டார்.