Top News

கல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா?



எதிர்வரும் 02.04.2018இல் கல்முனை மாநகர சபையின் மேயர் தெரிவு நடைபெறவுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்களையும் யார் இங்கு ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்ற பரபரப்புக்கு மத்தியில் இந்நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

கல்முனை மாநகர சபையின் மொத்த ஆசனங்கள் 41 ஆகும். இதில் ஐக்கிய தேசியக் கட்சி 12, சுயேற்சைக் குழு 04 (சாய்ந்தமருது) 09, இலங்கை தமிழ் அரசுக் கட்சி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 05, தமிழர் விடுதலைக் கூட்டணி 03, தேசிய காங்கிரஸ் 01, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 01, சுயேற்சைக் குழு இலக்கம் இரண்டு 01, சுயேற்சைக் குழு இலக்கம் 03 , 01 என ஆசனங்களைப் பெற்றுள்ளன.

இதில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை முன்னிறுத்திய சுயேற்சைக் குழு உறுப்பினர்களான 09 பேரும் இம்மாநகர சபையில் எந்தவிதமான அரசியல் அதிகாரங்களிலும் பங்கெடுப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்து தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அறிவித்துள்ளனர். ஆதலால் இவர்கள் மாநகர முதல்வர்,பிரதி மாநகர முதல்வர் பதவிகளுக்காக போட்டியிடுவதிலும் வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதிலும் மாநரக சபையின் நிலையியல் குழுக்களில் அங்கம் வகிப்பதிலும் எந்த அக்கறையும் கொண்டிலர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளது. இதனுடைய 10 உறுப்பினர்கள் நேரடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (மு.கா சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியென இக்கட்டுரையில் கையாளப்படுவது இனி இந்த அணியினரையே குறிக்கும்). மூன்றாவது இடத்திலிருக்கின்ற தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் 07 ஆசனங்களும் இந்த அணியினர்களுக்குச் சாதகமாக வாக்களிக்கும் நிலை உருவாக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது.

கடந்த 27.03.2018இல் காரைதீவு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது த.தே.கூட்டமைப்பு சார்ந்த தவிசாளர் வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்து தெரிவு செய்வதற்கு உதவியிருக்கின்றது. அதேபோல் 29.03.2018இல் பொத்துவில் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியுள்ளது. இந்தச் செயற்பாடுகளை வைத்தும் ஏலவே கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பில் த.தே.கூட்டமைப்போடு இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொழிற்பட்டதையும் உதாரணமாக எடுத்து நோக்குவதனூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த ஐ.தே.க அணிக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவர் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.

கல்முனை மநாகர சபையின் 41 மொத்த உறுப்பினர்களில் சாய்ந்தமருது சுயேற்சைக் குழவின் 09 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்வதில்லை என்ற அடிப்படையில் இவர்களைக் கழித்தால் எஞ்சியுள்ள 32 பேர்களுக்கிடையில்தான் வாக்களிப்பு நடைபெறும். இதன் ஊடாக இரண்டு வகையில் இங்கு ஆட்சி அதிகாரம் அமைய முடியும். ஒன்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த ஐ.தே.கட்சி அணியின் 12 பேருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த 07பேரும் மு.கா.வுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் மு.கா.வின் தரப்பிலிருந்து நிறுத்தப்படும் வேட்பாளர் மாநகர முதல்வராக தெரிவாவதற்கு வாய்பிருக்கின்றது.

இரண்டாவது வகையில் நாங்கள் பார்க்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியில் நேரடியாக 10 முஸ்லிம் உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த 05 முஸ்லிம் உறுப்பினர்களும், மருதமுனையைச் சார்ந்த சுயேற்சைக் குழுவில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒவ்வொரு முஸ்லிம் உறுப்பினர்களுமாக மொத்தம் 19 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுக்குள் கூட்டிணைந்தும் கல்முனை மநாகர சபையின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்ற முடியும்.

மேற்படி இரண்டு தெரிவுகளில் முஸ்லிம் காங்கிரஸ் முதல் தெரிவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றே குறிப்பிடலாம். த.தே.கூட்டமைப்போடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்கனவே இருந்துவருகின்ற சிநேகபூர்வமான அரசியல் அதிகார உறவு மிகவும் பிரபல்யமானது. அதிலும் குறிப்பாக த.தே. கூட்டமைப்பின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்வைத்து வருகின்ற பல கோரிக்கைகளோடு மு.கா தலைவர் றவூப் ஹக்கீம் தமது ஆதரவு பாங்கை வெளிப்படுத்தி வருபவர் என்கின்ற ஒரு குற்றச்சாட்டுக்குள் அவரை முஸ்லிம் அரசியல் களம் விமர்சித்து வந்திருப்பது இது விடயத்தில் கவனத்திற்குரியது.

த.தே. கூட்டமைப்போடு ஒரு இணக்கமான முடிவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வந்து கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் இருக்கின்ற இலகுத்தன்மை இரண்டாவதாகச் சுட்டிக்காட்டிய ஏனைய முஸ்லிம்களை அரவணைத்து ஆட்சியமைப்பதில் மு.கா.வினர்களுக்கு இல்லை. ஏனெனில் இரண்டாவது வகையில் மேலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளும் சுயேற்சைக் குழு இரண்டாம் இலக்கத்தில் தெரிவாகி இருப்பவர்களும் மு.கா கட்சிக்கு நேரடி எதிரான கருத்தியல் நிலைகொண்டவர்கள். இவர்களோடு மு.கா இறங்கிவந்து ஒரு இணக்கமான சூழலை உருவாக்குவதென்பது மு.கா.வைப் பொறுத்தவரை கடினமான ஒன்றாகவே அமைய முடியும்.

இலகுவான வழியொன்று இருக்க அதனைத் தவிர்த்துவிட்டு இறுக்கமானதின்பால் தங்களை இணைத்துக் கொண்டு சிரமப்படுவதை இயல்பாகவே யாரும் விரும்பாத ஒரு கோணம் அமைவதையும் நாம் புறந்தள்ள முடியாது. இதனாலும் மு.கா.வினர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைப்பதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமன்று தமது அரசியல் விரோதிகளுடன் கைகோர்த்து பயணிப்பது தமது அரசியல் செயற்பாட்டு இயக்கத்திற்க்கு எதிரகாலத்தில் இது இடர்களைத் தரமுடியுமென்று உள்ளூர மு.காவினர்கள் எண்ணக்கூடும்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த அரசியல் கட்சியில் போட்டியிட்ட வரலாறும் அவர்களுக்குள் உண்டு. இது பெரும் தேசியக் கட்சிகளுக்கு பயனளிக்கும் வகையில் இணைந்த கூட்டென்று விமர்சிக்கப்பட்ட்தும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதனை நமது முஸ்லிம் மக்களின் அரசியல் நலனுக்கு உபயோகிக்க இவர்களது தனிப்பட்ட அரசியல் பகையுணர்வை மறந்து முன்வருவதன் ஊடாக எந்தவிதமான குறைகளும் இவர்களை வந்தடையப்போவதில்லை என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.

உண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை மு.கா கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு வழங்க வேண்டும். ஏனெனில், சாய்ந்தமருது மக்களின் உணர்வை மதித்து நேரடி கள வேட்பாளர்களை நிறுத்தாத பொறுப்புணர்ச்சி என்பது, கல்முனை மாநகர சபையில் தமிழர்களின் ஆட்சி அதிகாரம் வந்துவிடக் கூடாது என்கின்ற கல்முனைக்குடி பெரும்பான்மைத் தரப்பினர்களின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கின்ற உணர்வையும் பேணவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு.

மற்றும் மருதமுனையைச் சார்ந்து ஏனைய மூன்று கட்சிகளிலும் சுயேட்சைக்குழுவிலும் தெரிவாகியிருக்கின்ற ஏனைய நான்கு உறுப்பினர்களும் முஸ்லிம்கள் என்ற வகையில் கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம்கள் கைப்பற்றுவதற்கு துணையாளர்களாக இருக்க வேண்டியது ஒரு சமூகப் பொறுப்பாகும். இதற்காக அங்கு மு.கா.வைச் சார்ந்த ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களைக் கொண்டிருப்பதினால் அவர்கள் தரப்பிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து அங்கு ஏற்படுத்த முடியுமான பிரதி மாநகர முதல்வர் பதவியையும் மற்றும் நிலையியல் குழுக்களிலும் போதிய பங்குபற்றுதலை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு உறுப்பினர் ஆக உச்ச பட்சமாக இரண்டு குழுக்களில் இடம்வகிப்பதற்கு உள்ளூராட்சி மன்றச் சட்டம் இடம் தருகின்றது. இவைகளை கருத்திற்கொண்டு கல்முனை மாநகர சபை ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்கு துணிவு கொள்ளவும் முடியும்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. முஸ்லிம்கள் என்ற வகையில் இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினருக்கு இருக்க தேவையில்லையா? என்பதாகும். இது வெளிப்படையில் நியாயமானதும் பொருத்தமானதுமான ஒரு கேள்வியாக அமைந்தாலும் அவர்களின் ஒரு நன்னோக்கத்துக்காக விடுபாட்டு உரிமையை ஏனைய முஸ்லிம்கள் இணைந்து வழங்க வேண்டிய தேவையின் அடிப்படையில் அவர்களை இதிலிருந்து விடுவித்து நோக்க வேண்டியிருக்கின்றது.

ஏனெனில், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனியாக பிரிந்து ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கினால் கூட கல்முனையின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் தரப்பினரிடம் இருந்து விடுபடாது என்பதை நிரூபிக்கும் இலட்சியத்தைக் கொண்டே அவர்கள் தனித்து தேர்தலில் களம் இறங்கியிருந்தனர். அவர்களில் நோக்கு என்பது இவ்விடத்தில் சிதைவடையவில்லை என்பதை நாம் இரண்டாவது சுட்டிக்காட்டிய ஆட்சி அதிகார முறைமையினூடாக நிரூபிக்கக்கூடியதாகும்.

கல்முனையிலிருந்து சாய்ந்தமருது பிரிந்து சென்றிருந்தால் கல்முனை மாநகர சபையின் மொத்த ஆசனங்களின் உறுப்புரிமை 30 ஆகவே அமையும். அவ்வாறு அமைந்திருந்தால் கூட முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கத்தை பின் தள்ளி தமிழ் மக்களின் அரசியல் ஆதிக்கம் மேலோங்குவதற்கு எந்த வாய்ப்புமில்லை என்பதையும் தமிழ் மக்களின் உச்ச பட்சமான 12 அல்லது 13 ஆசனங்கள் என்பதற்கு மேற்படாது என்பதையும் அச்சொட்டாக நிரூபித்திருக்கின்றது. ஆகவே, சாய்ந்தமருது மக்களின் நியாயங்கள் தெளிவாகவே அத்தாட்சிப்படுத்தப்படுகின்றது.

கல்முனை மாநகர சபை தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், “கல்முனையின் அரசியல் அதிகாரம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்விடக்கூடாது” என்பதை அழுத்தம் திருத்தமாக கல்முனைக்குடி சார்ந்த மு.கா.வின் அரசியல் பிரதிநிதிகள் பலமாக கூறி வந்துள்ளனர். இந்த நியாயத்தின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தங்களது அரசியல் எதிரிகளிடம் நாம் பேசுவதா அல்லது இறங்கிச் செல்வதா என்று பார்க்காது தேவையான கலந்துரையாடல்களை சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களோடு முடுக்கி விட்டிருக்க வேண்டும். அதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இதுவரையில் வெளிப்படையில் முன்னெடுக்காத ஒரு கோணத்தையே அவதானிக்க முடிகின்றது. இந்த கடுமையான நிலைப்பாடு என்பது சாய்ந்தமருது மக்களின் கருத்தை பொய்யாக்கி விடுவதற்கான திட்டமிடலா? என்கின்ற ஓர் ஐயத்தை இவ்விடத்தில் எழுப்பாதிருக்க முடியாது.

எது எவ்வாறிருந்தாலும் சாய்ந்தமருது மக்களின் எதிர்பார்ப்பும், எண்ணமும் நேர்மையானது என்பதை இத்தேர்தல் முடிவுகள் நிரூபிக்கப்போதுமானது. அதனை இல்லாதொழிப்பதற்காக வேறு உபயோகங்களை மு.கா. தரப்பினர்கள் முன்னெடுத்தாலும் சாதாரண பொதுமக்கள் விளங்கத்தகுமான ஒன்றாக அமைந்திருப்பது ஓர் ஆறுதலான விடயம் என்றே குறிப்பிடலாம். 

கடந்த 27.03.2018இல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் கல்முனை மாநகர சபை எதிர்காலத்தில் நான்காக பிரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் முன்வைக்கப்பட்டதாக சிறிய அளவிலான செய்திகள் தெரிவித்திருந்தன. இச்செய்தி தொடர்பில் உண்மை என்றும், பொய் என்றும் இருவிதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

என்றாலும் கடந்த 27ஆம் திகதிய அமைச்சரவையின் அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் என 39 விடயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கல்முனை மாநகர சபை பிரிப்பு சம்பந்தமாகவோ அல்லது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பிலான ஒரு விடயமோ இல்லை என்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றினை பின்வரும் ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. டெய்லி நியுஸ் முகப்பக்கத்திலுள்ள வீடியோ இணைப்பையும் டெய்லி சிலோன் இணைய தளத்திலுள்ள அமைச்சரவையின் தீர்மானங்கள் தொடர்பான இணைப்பிலும் காணமுடியும்.

இதில் எழுப்பக்கூடிய ஒரு பலத்த சந்தேகம் என்னவென்றால் அமைச்சரவை அங்கீகாரம் பெறாத ஒரு விடயத்தை முன்வைத்து சாய்ந்தமருது சுயேட்சை அணியினரின் இலட்சியத்தை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணியினர் பங்களிப்புச் செய்கின்றனர் என்கின்ற செய்தியை இவர்களுக்கு ஊட்டி சாய்ந்தமருது அணியினரின் ஆதரவுத்தளத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அணிக்கு மாற்றிகொள்வதற்கான ஒரு எத்தனமாக்க் கூட இதனை பார்க்கலாம்.

இதன் அடிப்படையில் சாய்ந்தமருது சுயேட்சை அணியினர் 09பேரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 05பேரும் ஏனைய தேசிய காங்கிரஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மருதமுனையைச் சேர்ந்த சுயேட்சை அணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் நான்கு ஆசனங்களும் பிரதானமாக ஓரணிப்பக்கம் கொண்டு வருவதோடு மு.கா. சார்ந்த மருதமுனை உறுப்பினர்களின் மூவரினதும் அல்லது தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவை எடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த பிரதிநிதியை முதல்வராக்குகின்ற ஒரு திட்டத்தின் அடிப்படையிலும் இந்த அமைச்சரவைப்பத்திரம் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை அமைக்கும் தொடரில் எந்த அணியினருக்கும் சாய்ந்தமருது சுயேட்சை அணியினர் தமது ஆதரவை பகிரங்கமாகவோ இரகசியமாகவோ வழங்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். நமது ஆதரவு இல்லாமல் கல்முனை மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களின் கைகளில் வரக்கூடிய சாத்தியம் பல வகையிலும் இருக்கிறது என்பதினால் நாம் யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்கின்ற தூய்மையான உணர்வோடு நமது கருத்தில் நிலைபேறாக இருப்போம்.

நூறுல் ஹக்
Previous Post Next Post