பாறுக் ஷிஹான்
நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் நிம்மதி அற்று பிரிவுடனும் பகைமையுடனும் வாழக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. சில விஷமிகளின் செயற்பாடு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பகைமை உணர்வினை தொற்றுவித்துள்ளது. இது இனங்களுக்கு இடையில் உண்டான பிரைச்சனை அல்ல. நல்லாட்சியில் குழப்பத்தை உண்டாக்கவேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொண்ட ஒரு குழுவினரின் செயற்பாடே ஆகும் என யாழ் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார்.
இந்த நிலையினை தொடரவிடாது நிறுத்தி பக்கசார்பற்ற விசாரணை மூலம் இனங்களுக்கிடையில் சுமூகமான வாழ்வினை ஏற்படுத்த ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் அனைத்து தரப்பினரும் சுமூகமான நல்லாட்சியின்பால் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். மேலும் இந்த நாட்டினை குழப்பி சுயலாபம் தேடும் சக்திகளை இனங்கண்டு அவர்களை கூண்டுடன் களை பிடுங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
சுதந்திரமான நமது நாட்டில் சகல இன மக்களும் அச்சமின்றி நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஒரு அணியாக திரண்டு நிலைநாட்டவேண்டும்.
இப்பிரச்சனையில் அநீதி இழைத்தவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் என்பதோடு நம் நாட்டில் நல்லாட்சியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.