ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினை உண்டுபன்ன சிலர் முயற்சிக்கின்றனர். இம் முயற்சி ராஜபக்ஷ குடும்பத்தாரின் விருப்பத்திற்கு இடம் பெறுகிறதா என்று எண்ணத்தோன்றுகிறது என சாகாதாரம் போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நான் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கும் நோக்கோடு செயற்படுகின்றேன். அரசை பாதுகாக்க வேண்டிய கடமை எம் மீதுள்ளது.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர வேண்டிய தேவை ராஜபக்ஷ குடும்பம் மற்றும் கூட்டு எதிரணியினருக்கே தேவையாக உள்ளது. தமக்கு எதிராகவுள்ள வழக்குகளை மறைக்க அவர்கள் பல விதமாக சிந்திக்கின்றனர். இதனை அறியாத எமது அரசாங்கத்திற்குள் இருக்கும் சில அமைச்சர்களும் உறுப்பினர்களும் வெவ்வேறு கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது எமக்குள்ள வேலை தலைவரை மாற்றுவதல்ல, நாட்டை அபிவிருத்தி செய்து 2020 ம் ஆண்டு பொதுத் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேர்தலில் களமிறங்கினால் வெற்றி கொள்ளலாம். எனவே இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இந்த இணைப்பினை இல்லாமல் செய்வதற்கே கூட்டு எதிரணியினர் முயற்சிக்கின்றனர்.
சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்தே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின்ற போது எதிராக மேடைகளில் பேசியோரும் உள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பொழுது அவரை மானபங்கப்படுத்தியவர்களும் இருக்கின்றனர். அனைத்து சவால்களையும் தாண்டி நாம் மக்கள் பலத்தோடு தேர்தலை வெற்றி கொண்டோம். எனவே இப்படிப் பட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதானது, ‘கண்ணாடி வீட்டினுள் இருந்து கல் எறிவது’ போன்றது. இதனை விடவும் எதிர் கட்சியில் அமர்ந்து கொள்வது யாவருக்கும் நல்லது”.