பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்வது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் தான் பதவியில் இருந்து விலகும் வகையில் எந்த அடிப்படையான காரணங்களும் இல்லை என்பது பிரதமரின் நிலைப்பாடாகும். தேர்தலில் வெற்றி பெற்று தான் பிரதமர் பதவிக்கு வந்துள்ளதாகவும் தான் பதவியில் இருந்து விலக வேண்டுமாயின் ஏனைய அமைச்சர்கள் மாத்திரமல்ல, ஜனாதிபதியும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே பிரதமரின் நிலைப்பாடு என கூறப்படுகிறது.
எப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொண்டு வெற்றி பெறலாம் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பிரதமர் பதவி விலக வேண்டும் என தெரிவித்திருந்தனர்.