அஷ்ஷெய்க் எம்.ஜீ. முஹம்மத் இன்ஸாப் (நளீமி)
எம்.ஏ. (சூடான்), விரிவுரையாளர், கதீஜதுல் குப்ரா அரபிக்கல்லூரி,- வட்டதெனிய.
எம்.ஏ. (சூடான்), விரிவுரையாளர், கதீஜதுல் குப்ரா அரபிக்கல்லூரி,- வட்டதெனிய.
மௌலவி தாஸீன், தாஸீன் நத்வி என அறியப்பட்ட அஷ்ஷெய்க் யூ.எம் தாஸீன் நத்வி அல் அஸ்ஹரி நீர்கொழும்பு கொச்சிக்கடையில் 1932.-07.-27 ஆம் திகதி பிறந்து 1977-.07-.18 இல் வபாத்தானார். இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக, ஹமீத் அல் ஹுஸைனி பாடசாலை ஆசிரியராக, கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக, ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக, ஜாமிஆ நளீமிய்யாவின் முதல் அதிபராக இருந்து தனது குறுகிய கால வாழ்வில் பல பணிகளை செய்துள்ள தாஸீன் நத்வி, சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் காணப்பட்டார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமையும் பஸ்து மற்றும் மலாய் மொழிகளை பேசக்கூடியவராகவும் காணப்பட்டார். தாஸீன் நத்வியிடம் காணப்பட்ட இம் மொழிப்புலமையானது குறித்த மொழிகளில் உள்ள இலக்கியங்களை ஆழ்ந்து வாசிக்கவும் இலக்கிய விமர்சனம் செய்யவும் துணைபுரிந்தது.
கபூரிய்யா அறபுக்கல்லூரியில் கல்விபெறும் காலத்தில் மௌலானா உமர் ஹஸரத்திடம் பெற்ற தமிழ் இலக்கண, இலக்கிய பாடங்கள் தனது ஆரம்ப காலத்திலேயே இலக்கியம் படைக்கும் ஆர்வத்தை இவரில் தூண்டியதுடன், அவரை ஒரு சிறந்த இலக்கியவாதியாக உருவாக்கியது.
தமிழில் சாண்டிலியன், ராஜாஜி, மு.வரதராசன் போன்றோரின் புத்தகங்களை அதிகமாக வாசிக்கக் கூடியவராக இருந்தார்.
மேலும் உருது இலக்கியத்தைப் பொறுத்தவரை அதிலே ஆழ்ந்த ஈடுபாடும் வாசிப்பும் கொண்டவராகவும் உருது இலக்கிய வரலாறு தொடர்பாக அதிகம் வாசிக்கக் கூடியவராகவும் இருந்தார். அல்லாமா இக்பால், அலகபாதி, மாஹிருல் காதிரி போன்றோரின் இலக்கியப் படைப்புகளை விரும்பி வாசிக்கக் கூடியவராகவும், குறிப்பாக அல்லாமா இக்பாலின் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டவராகவும் காணப்பட்டார். இதனாலோ என்னவோ தனது சகோதரியின் மகனுக்கு “இக்பால்” என பெயர்சூட்னார். மேலும் லக்னோ நத்வதுல் உலமாவில் கல்விகற்கும்போது தனது சகோதரியின் கணவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் “இக்பாலை ஓர் இக்பாலாக்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறுகிறார்.
மேலும் உருது இலக்கியத்தைப் பொறுத்தவரை அதிலே ஆழ்ந்த ஈடுபாடும் வாசிப்பும் கொண்டவராகவும் உருது இலக்கிய வரலாறு தொடர்பாக அதிகம் வாசிக்கக் கூடியவராகவும் இருந்தார். அல்லாமா இக்பால், அலகபாதி, மாஹிருல் காதிரி போன்றோரின் இலக்கியப் படைப்புகளை விரும்பி வாசிக்கக் கூடியவராகவும், குறிப்பாக அல்லாமா இக்பாலின் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டவராகவும் காணப்பட்டார். இதனாலோ என்னவோ தனது சகோதரியின் மகனுக்கு “இக்பால்” என பெயர்சூட்னார். மேலும் லக்னோ நத்வதுல் உலமாவில் கல்விகற்கும்போது தனது சகோதரியின் கணவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் “இக்பாலை ஓர் இக்பாலாக்க முயற்சி செய்யுங்கள்” என்று கூறுகிறார்.
மேலும் “பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள்” எனும் தனது பயண அனுபவத்தில் உருது மொழி வரலாறு, உருது இலக்கிய வரலாறு தொடர்பாக எழுதும்போது, “இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராக அல்லாமா இக்பால் கருதப்படுகிறார்.
உருது இலக்கிய கர்த்தாக்களில் தலையாயவர் அல்லாமா இக்பால். அவரது கவிதைகளில் சுவை இருந்தது, கருத்திருந்தது, நயம் இருந்தது, ஓசை இருந்தது, கவிதையில் இருக்கவேண்டிய அவ்வளவு இலட்சணங்களும் இருந்தன. நான் லக்னோ கலாசாலையில் இருக்கும் காலை உருது மொழியை கற்க வேண்டும் என்ற கட்டாயம் அங்கு இருந்தது. ஏனெனில் அங்கு உர்து மொழி மூலமே விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன. எனவே உருது மொழியை கற்பதில் நான் ஆர்வம் காட்டினேன், அல்லாமா இக்பாலின் கவிதைகளை படிப்பதற்காவது உருது மொழி கற்கவேண்டும் என்ற ஆசையில் கற்றதாலோ என்னவோ ஒரு சில மாதங்களில் உருது மொழியை என்னால் கற்க முடிந்தது” என்று குறிப்பிடுகிறார்.
ஜாமிஆ நளீமிய்யாவை நிருவுவதற்கு முன்னர் பாகிஸ்தானிற்கு சென்று பல கலாசாலைகளையும் பார்வையிட்டுவர நளீம் ஹாஜியார் ஐந்து பேர் அடங்கிய ஒரு குழுவை அனுப்பினார். அந்தப் பயணத்தின் போது அல்லாமா இக்பாலின் அடக்கஸ்தலத்தை அக் குழு தரிசித்தது. அப்போது அங்கு வந்திருந்த பாகிஸ்தான் மாணவர்களுக்கு மௌலவி தாஸீன் அல்லாமா இக்பாலின் “ழர்பே கலீம்” என்ற கவிதையை பாடிக்காட்டியதும் அம்மாணவர்கள் அனைவரும் அழுதனர் என அக்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த ஹிபதுல்லாஹ் ஹாஜியாருடன் நான் மேற்கொண்ட ஒரு சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
1956 ஆம் ஆண்டு தாஸீன் நத்வி லக்னோவில் கற்றுவிட்டு வரும்போது கேரளாவில் ஜமாஅதே இஸ்லாமியின் மர்கஸில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது பெங்களூரிலிருந்து சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றதாகவும், அங்கே புகழ் பெற்ற உருது மாத இதழான “மிஃயார்”இன் ஆசிரியர் புலவர் “ஹாபிஸ் மீரா ரெட்டி ஸாஹிப்”பை சந்தித்ததாகவும், அவரோடு உருது இலக்கியம் தொடர்பாக வாதித்ததாகவும் தனது நாட்குறிப்பில் தாஸீன் நத்வி எழுதியிருந்தார். என்று என்.எம். ரஸீன் ஆசிரியர் தாஸீன் நத்வி பற்றிய நினைவுக் குறிப்பில் எழுதியுள்ளார். இவற்றிலிருந்து தாஸீன் நத்வியின் உருது இலக்கிய ஈடு பாட்டை புரிந்துகொள்ள முடியும்.
அதேபோன்று அரபு இலக்கியத்திலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவராகவும் தாஸீன் நத்வி காணப்பட்டார். அரபு மொழியில் அஹ்மத் ஷவ்கி, ஆகிப், அப்பாஸ் மஹ்மூத் அக்காத், அஹ்மத் அமீன், இப்றாஹீம் அப்துல் காதிர் , நஜீப் மஹ்பூழ், போன்றோரது நூல்களை விரும்பி வாசிப்பவராக இருந்தார். மேலும் நளீமிய்யாவில் “ அல் முஅல்காத் அஸ்ப்உ” எனும் புகழ்பெற்ற ஜாஹிலிய்யா கால கவிதைகளை அழகிய முறையில் மாணவர்களுக்கு கற்பித்தார்.
அறபு இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற துறைகளில் 98 நூல்களை பட்டியல் படுத்த முடியுமாக இருந்தது. ஆயினும் விரிவஞ்சி இவற்றுடன் போதுமாக்கிக் கொள்கிறேன், அத்தோடு இவற்றுள் பெரும்பாலான நூல்கள் 1963க்கும் 1966க்கும் இடையில் எகிப்திலே கற்கும் காலப்பிரிவில் வாங்கியவையாகும். இந்நூல்கள் இன்றளவும் நளீமிய்யா நூலகத்தில் காணப்படுகின்றன.
தாஸீன் நத்வி ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகளிலுள்ள இலக்கியங்களையும் படிக்கக் கூடியவராக காணப்பட்டார். மேலும் பாரசீகக் கவி உமர் கையாமின் சில கவிதைகளை மொழிபெயர்த்தும் உள்ளார். எனினும் அதனை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
இலக்கியப் பங்களிப்பு
தாஸீன் நத்வி உமர் ஹஸரத்திடம் பெற்ற தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், அவரது பன்மொழிப் புலமையும் தமிழில் கவிதைகளை யாக்கவும், சிறுகதைகள், மற்றும் இலக்கியப்படைப்புகளை படைக்கவும் துணைபுரிந்தன.
இந்தவகையிலே “நவயுகம்”, “அல்-இல்ம்” ஆகிய பத்திரிகைகள் ஆரம்பத்தில் தாஸீன் நத்வியின் எழுத்துக்கு களம் அமைத்துக்கொடுத்தன. அல் இல்ம் பத்திரிகையின் ஆசிரியர் மர்ஹூம் அப்துர் ரஸ்ஸாக் தாஸீன் நத்வியினது புரட்சிகர சிந்தனையால் கவரப்பட்டு தனது பத்திரிகையில் எழுத வாய்ப்பும் ஊக்கமுமளித்துவந்தார். இதனை தாஸீன் நத்வி அடிக்கடி நினைவு கூறுபவராக இருந்தார். 1951ஆம் ஆண்டு அல் இல்ம் பத்திரிகையில் இவர் எழுதிய “மரணம்” என்ற கவிதை பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.
சிறுகதைகள்
இதேவேளை தாரகை, தினகரன், தமிழ்நாட்டின் ஷாஜஹான், உண்மை உதயம், வழிகாட்டி போன்ற பத்திரிகைகளிலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதினார். 1952 ஆம் ஆண்டு தினகரனில் பயங்கரக் குரல், மரண இரகசியம், சகோதர வாஞ்சை, இலட்சியத் திருமணம், பயங்கரக் கனவு, சமாதானப்பிரியன் போன்ற தலைப்புகளில் சிறுகதைகள் எழுதினார். மேலும் சிந்தாமணி எனும் வாரப் பத்திரிகையில் “குழந்தை” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினார்.
கட்டுரைகள்
1952 களில் தினகரனில் “இக்பாலின் கவிதைகளில் நபிகள் நாயகம்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியதாக என்.எம்.எம். ரஸீன் ஆசிரியர் கூறுகின்றார். மேலும் அல்லாமா இக்பால் பற்றி தினகரனில் எழுதிய கட்டுரையொன்றும், அஹ்மத் ஷவ்கி தொடர்பாக எழுதிய இரண்டு கட்டுரைகளும் 1983 இஸ்லாமிய சிந்தனையில் மீள் பிரசுரிக்கப்பட்டன, அதேபோன்று “மறைவழிகாட்டிய மாநபி” எனும் தலைப்பில் 1966ஆம் ஆண்டு “அல் பயான்” மீலாத் மலரில் எழுதிய கட்டுரையொன்று 1982ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நளீமிய்யா மாணவர்களது இதழான சத்திய தீபத்தில் மீள் பிரசுரிக்கப்பட்டது
குர்ஆனே கூறாயோ
1952ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி தமிழ் நாட்டின் திருச்சியிலிருந்து வெளிவந்த “ஷாஜஹான்” என்ற பத்திரிகையில் “குர்ஆனே கூறாயோ” எனும் கவிதை பிரசுரமாகியது. பின்னர் ஜமாஅது அன்சாரிஸ்ஸுன்னதில் முஹம்மதிய்யா வெளியிடும் உண்மை உதயம் பத்திரிகையில் 1957களில் தொடர்ந்து வெளியானது. 99 கவியடிகளைக் கொண்ட இவ்விருத்தட் பாக்கள் அல்லாமா இக்பாலின் “ஷிக்வா” வின் சாயலில் காணப்பட்டது. 72வது கவியடியிலிருந்து 99 வரையானவை தாஸீன் நத்வி அல்அஸ்ஹரிலிருந்து வந்தபின் எழுதியவை என, என்.எம்.எம். ரஸீன் ஆசிரியர் தனது தாஸீன் நத்வி பற்றிய நினைவுக் குறிப்புகளில் கூறுகிறார். பிற்பட்ட காலத்தில் இக்கவிதைகள் நூலுருப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்திருந்தன, ஆயினும் இன்றுவரை வெளியிடப்படவில்லை.
கவிஞர் அப்துல் காதர் லெப்பை 1967.11.16 ஆம் திகதி இதற்கான அணிந்துரை வழங்கியிருந்தார். அவ்வணிந்துரையில் கீழ்வருமாறு கூறுகிறார்:
“இலங்கைவாழ் முஸ்லிம்களின் பின்தங்கு நிலையையிட்டு மனம் வருந்தார் இல்லை. நிலையானதும் பூரணமானதுமான ஒரு இனம் தன்னிலை மறந்து சுயவுணர்விழந்து காணப்படுவதையிட்டு குர்ஆனிடம் முறையிடுகிறார் நமது கவிஞர் மௌலவி தாஸீன்………”
“….கவிவரிகள் தெளிந்த நடை கொண்டன. யாராலும் இலகுவில் விளங்கிக் கொள்ளலாம், “மறைதாசன்” ஆகிய நமது புலவர் ஆலிம் மறையிடமே மன்றாடுகிறார், மறையிடமே தனது குறையை முறையிடுகிறார், “ஏன் மறையே! கூறாயோ நீ”, என்ற ஈற்றடியுடன் எல்லா விருத்தப்பாக்களும் முடிவடைகின்றன.”
“….கவிவரிகள் தெளிந்த நடை கொண்டன. யாராலும் இலகுவில் விளங்கிக் கொள்ளலாம், “மறைதாசன்” ஆகிய நமது புலவர் ஆலிம் மறையிடமே மன்றாடுகிறார், மறையிடமே தனது குறையை முறையிடுகிறார், “ஏன் மறையே! கூறாயோ நீ”, என்ற ஈற்றடியுடன் எல்லா விருத்தப்பாக்களும் முடிவடைகின்றன.”
கவிதைகள்
தாஸீன் நத்வி, முஹர்ரம், மிஃராஜ் போன்ற விஷேட சந்தர்ப்பங்களிலும் , ஏனைய பல சந்தர்ப்பங்களிலும் பல கவிதைகளை யாத்துள்ளார்கள். கம்மல்துறை மறைதாசன், ஷகீக் ஏ. ரஹ்மான், ஜச்ஹர், இப்னு உஸ்மான் போன்ற புனைப் பெயர்களில், இலங்கை மற்றும் இந்திய இதழ்களில் அவை பிரசுரமாகின. அவற்றுள் “செத்துவிடு சமுதாயம் சீரழிந்தால்” “இருள்போக்கும் திட்டங்கள்” போன்றவற்றை குறிப்பிட்டுக்கூறலாம். மேலும் சில நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகள், ஆசியுரைகள் என்பன கவிதை வடிவிலேயே காணப்பட்டன. மௌலானா மௌதூதி எழுதிய “காதியானி பிரச்சினை” என்ற நூலை தாஸீன் நத்வி தமிழில் மொழி பெயர்த்தார். அந்நூலுக்கான மொழி பெயர்ப்பாளர் உரையும் கவிதைவடிவிலேயே காணப்பட்டது. மேலும் நளீமிய்யா மாணவர்களது கையெழுத்து சஞ்சிகைக்கு தாஸீன் நத்வி வழங்கிய முன்னுரையும் கவிதை வடிவிலேயே காணப்பட்டது. அக்கவிதையின் கீழ்வரும் அடிகள் இன்றளவும் இளைஞர்களால் உச்சரிக்கப்படுகின்றன.
கொழுத்திவிடு சத்தியத் -தீ
கொழுந்து விட்டெரியட்டும்
அழுத்திச் சொல் - அல்லாஹ்வே
அவனின்றி எவர்க்குமஞ்சோம்
பழுத்த கலை ஞானங்கள்
பண்பு நிறை ஒழுக்கங்கள்
உளத்தினில் தூய ஈமான்
உள்ளவரை அச்சமேனோ.
கொழுந்து விட்டெரியட்டும்
அழுத்திச் சொல் - அல்லாஹ்வே
அவனின்றி எவர்க்குமஞ்சோம்
பழுத்த கலை ஞானங்கள்
பண்பு நிறை ஒழுக்கங்கள்
உளத்தினில் தூய ஈமான்
உள்ளவரை அச்சமேனோ.
அதேவேளை வளர்ந்த பெரியோர்களுக்கு மட்டுமல்லாமல் சிறார்களுக்கும் எளிய முறையில் நல்லபல கருத்துக்கள் பொதிந்த கவிதைகளை எழுதி மனனமிடச் செய்துள்ளார். அவற்றில் கம்மல்துறை பிரதேச அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு தாஸீன் நத்வி எழுதிய சில கவிவரிகளை எம்.ேஜ.எம். தாஜுதீனுடன் நான் மேற்கொண்ட சந்திப்பின் போது பாடிக்காட்டினார். அவ்வரிகள் வருமாறு:
"சத்திய மார்க்கம் கூறும் - நல்
சத்திய வழிகள் கொண்டிடவே
நித்தமும் உலகில் நாம் வாழ்தல்
அவசியம் இதனை உணர்ந்திடுவீர்
வட்டி எடுத்தல் கூடாதாம்
வாத்தியம் வாசிக்கக் கூடாதாம்
கெட்ட நடனமும் நாட்டியமும்
கூடாதாம் இதை உணர்ந்திடுவீர்"
பயணக்கட்டுரைகள்
சத்திய வழிகள் கொண்டிடவே
நித்தமும் உலகில் நாம் வாழ்தல்
அவசியம் இதனை உணர்ந்திடுவீர்
வட்டி எடுத்தல் கூடாதாம்
வாத்தியம் வாசிக்கக் கூடாதாம்
கெட்ட நடனமும் நாட்டியமும்
கூடாதாம் இதை உணர்ந்திடுவீர்"
பயணக்கட்டுரைகள்
(I) எழில்மிகு எகிப்து நாட்டினிலே
கல்விக்காகவும், வணக்கவழிபாட்டிற்காகவும், நளீமிய்யாவின் உருவாக்கத்திற்காகவும் தாஸீன் நத்வி பல பயணங்கள் மேற்கொண்டார்கள். தான் மேற்கொண்ட பயணங்களின் போது அப்பயணம் தொடர்பாக எழுதுவதற்காக குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளும் வழமை காணப்பட்டது.
இந்தவகையில் எகிப்திலே கழித்த இரண்டரை வருடங்களில் தாஸீன் நத்வி பெற்ற அனுபவங்களையும், அங்கு கண்ட காட்சிகள், அறிஞர்களுடனான உறவுகள் என்பன தொடர்பான குறிப்புகளை எடுத்து வைத்திருந்தார். அக்குறிப்புக்களைக் கொண்டு “எழில்மிகு எகிப்து நாட்டினிலே” எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுத ஆசைப்பட்டார். ஆயினும் அதனை நிறைவு செய்துகொள்ள முடியாது போனது. அது பற்றி என்.எம்.எம். ரஸீன் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார் “ எகிப்து நாட்டிலே வாழ்ந்த இரண்டரை வருடங்களும் அவரைப் பொறுத்தவரை அவரது வாழ்வின் பொற்காலம் என்றுதான் கூறவேண்டும் “எழில்மிகு எகிப்து நாட்டினிலே” என்றதொரு புத்தகத்தை எழுதுவதற்கு குறிப்புகளை எடுத்துவைத்திருந்தார், என்னை அடிக்கடி அதனை எழுத வரும்படி அழைத்தார், அந்தக்குறிப்புகளில் அவர் எகிப்து நாட்டில் கழித்த இரண்டரை ஆண்டுகளையும் பொற்காலம் என குறிப்பிட்டிருந்தார், அங்கு அவர் சந்தித்த இஸ்லாமிய அறிஞர்கள், அரபு இலக்கியகர்த்தாக்களை அக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்”.
(II) பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள்
ஜாமிஆ நளீமிய்யாவை நிறுவுவதற்கு நளீம் ஹாஜியார் தீர்மானித்தபோது, அன்று இலங்கையிலிருந்த அறபுக்கல்லூரிகளிலிருந்து வேறுபட்டதாக, ஒரு சிறந்த கலைத்திட்டத்தை உள்ளடக்கிய கலாநிலையமாக அது இருக்கவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனவே இதற்காக உலகின் பல பாகங்களிலும் உள்ள அறபுக்கல்லூரிகளை தரிசித்து, இஸ்லாமிய அறிஞர்களை சந்தித்து அவர்களது ஆலேசனையை பெற விரும்பினார்கள். இதனடியாக1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மௌலவி தாஸீன் நத்வி, நளீமிய்யாவின் தற்போதைய பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, ஹிபதுல்லாஹ் ஹாஜியார், ஏ.ஆர்.எம். ஸுலைமான், பாயிஸ் ஆகிய ஐவரை உள்ளடக்கிய ஒரு குழு பாகிஸ்தானிற்கு சென்றது. அங்கு அவர்கள் பல அறபுக்கல்லூரிகளையும், அறிஞர்களையும் சந்தித்தனர். அங்கு கழித்த பதினான்கு நாட்களின் அனுபவங்களையும், பயண நிகழ்வுகள், சந்திப்புகள், அனுபவங்கள் என்பவற்றை உள்ளடக்கி “ பாகிஸ்தானில் பதினான்கு நாட்கள்” எனும் நூலை எழுதினார். ஆயினும் நீண்ட காலமாக பிரசுரமாகாமல் இருந்த இந்நூலை பேருவளையைச் சேர்ந்த ஹம்ஸா பாதுகாத்து வைத்திருந்தார். பின்னர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், அதனைப் பெற்று மீள்பார்வை பத்திரிகையில் 1997ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை பிரசுரித்தார்.
இறுதியாக, இன்றளவும் நூலுருப்படுத்தப்படாத தாஸீன் நத்வியின் ஆக்கங்கள் மிக விரைவில் நூலுருப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவை இலக்கியத் திறனாய்வுக்கும் உட்படுத்தப்படவேண்டும் என்பது எனது மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஆகும்.