சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஐக்கியதேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் சனிக்கிழமை காலை ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சியால் சுதந்திர கட்சியின் ஆதரவின்றியே இலகுவில் வெற்றிகொள்ள முடியும். நடைபெறவுள்ள வாக்களிப்பில் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும். இவர்கள் அவ்வாறு வாக்களித்து இந்த தேசிய அரசாங்கத்தை புதன்கிழமையுடன் முடிவுக்கு கொண்டுவந்து வியாழன் முதல் ஐக்கியதேசிய கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.
இதுவே ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பாகும். கடந்த இரண்டரை வருடங்களாக பெயரளவில் மட்டுமே ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களுக்கு எம்மால் சேவை செய்ய முடியவில்லை. இருபது வருடங்களாக ஐக்கியதேசிய கட்சிக்காக கொடி கட்டிய பலர் இன்று கட்சியில் இருந்து ஒன்றுமே அனுபவிக்காமல் முதுமையடைந்துள்ளனர். இப்போது அவர்களின் பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் அதை கூட கொடுக்க முடியாத நிலையில்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இன்று உள்ளோம்.
இருபது வருடங்களாக எதிர்க்கட்சியிலில் இருந்த எமது ஆதரவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட எம்மால் தீர்க்க முடியாதுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க எமது அமைச்சர்களை நாடினால் எமது செயற்பாடுகளை தடுப்பதற்கான அறிவுறுத்தல் சுதந்திர கட்சி அமைச்சர்கள் மூலம் ஜனாதிபதியிடமிருந்து வருகிறது. இவ்வாறே சென்றால் பொதுமக்களின் பிரச்சினையை நாம் எப்படி தீர்ப்பது? இதனாலேயே ஐக்கிய தேசிய கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் அதிருப்தியுடன் உள்ளனர். தேசிய அரசாங்கம் இருக்கும் வரை இந்த நிலையே தொடரும்.
எமது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக செயற்பட்டவர்களே இன்று அமைச்சர்களாக உள்ளனர். இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து மகிந்தவுக்கும் பொதுஜன பெரமுனவுக்குமே இவர்கள் சேவை செய்கிறார்கள். எமது அரசாங்கத்தின் மூலம் வேலை பெற்றவர்களே இம்முறை மஹிந்த அணியில் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காக தமது வாழ்நாளை தியாகம் செய்த தொண்டர்கள் இன்னும் ஒரு சலுகைகளையும் பெறவில்லை.
ஆகவே உடனடியாக இந்த தேசிய அரசாங்கத்தை கலைத்து தனியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். இதுவே எமதுகட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு. எமது அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்டு எமது அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. எமது அரசால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்திலும் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கேட்கின்றனர். அரசாங்கத்திற்கு பிரச்சினை வரும்போது அதை ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் விரலை நீட்டி பிரதமருக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த முடிவொன்றை பிரதமர் எடுப்பார் என நாம் நம்புகிறோம்.
அத்துடன் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு ஒன்று நிகழும். அதன்மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாவார்,என தெரிவித்தார்.