முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் கூறியதாவது:-
நாங்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக கண்டிக்கு சென்றுள்ளார். அங்கு விசேட கலந்துரையாடலொனறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடற்படை தளபதி தலைமையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறிய விடயமொன்று இந்தளவு தூரம் பெரிதாகும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்த்தமையிட்டு நாங்கள் கடுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம்.
அதேவேளை, யுத்த கால சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கருதி அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டது. அதுபோன்று, தற்போதும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். நிலைமையினை பாதுகாப்பு தரப்பால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கோரிக்கை விடுத்துள்ளோம் - என்றார்.