Top News

முன்மாதிரி காட்டிய முஸ்லிம் டாக்டர், சிகிச்சை வழங்க மறுத்த பேரினவாத டாக்டர்



வைத்தியத் தொழில் ஓர் உயர்ந்த தொழிலாகும். வைத்தியர்கள் இன, மத பேதமின்றி இருபத்திநான்கு மணி நேரமும் கடமைபுரிய கடமைப்பட்டவர்கள்.

சனியன்று நாட்டின் பிரபல சிங்களத் தினசரி ஒன்றில் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் ஆற்றிய பணி பற்றி வெளிவந்த செய்தி பற்றி நாடு பரவலாகப்பேசி வருகிறது.

வெலிஓய சம்பத் நுவர வைத்தியசாலைக்கு திடீரென சிகிச்சைக்கு வந்த நோக்குள்ளான பாடசாலை மாணவி ஒருவரை எடுத்துச் சென்ற போது, அந்த வைத்தியசாலையில் டாக்டர்கள் எவருமில்லாத நிலையில் 24மணிநேர சேவைக்குப் பின் நோயுற்று உத்தியோகபூர்வ விடுதியிலிருந்த முஸ்லிம் பெண் டாக்டரான ரபீனா முஹம்மத், பதவிய ஆரம்ப வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ததாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.

அந்த வைத்தியசாலையில் பணி புரியும் தாதி கூட இந்த நோயாளியுடன் போவதற்கு மறுத்துள்ள நிலையில், டாக்டர் ரபீனா முஹம்மத் அம்பியூலன்ஸ் வண்டியை அழைத்து குறித்த நோயாளியை பதவிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். வைத்தியர் ஒருவருக்கான உயரிய பண்பினை அவர் காட்டியுள்ளார்.

இதேநேரம் கடந்த ஐந்தாம் திகதி திகன கலவரத்தின் போது திகன ஹிஜ்ராபுரவில் அதிரடிப்படையினரின் தாக்குதலுக்குள்ளாகி தெல்தெனிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு  எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படாதது குறித்து தாக்குதலுக்குள்ளானவர்கள் அளித்த வாக்குமூலங்கள் சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றன. 

ஹிஜ்ராபுர கிராமத்தில் பொலிஸ் அதிரடிப்படையினரின் அத்துமீறிய தாக்குதல் நடத்துவது தொடர்பாக கேள்விப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையிலே மத்தும்பற பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். பாஜில் தாக்குதலுக்குள்ளானார்.

தாக்குதலுக்குள்ளான எம்.எம்.எம். பாஸிலின் இல்லத்திற்குச் சென்ற போது அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். இருவரும் தலையில் காயங்களுடன் தெல்தெனிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, அங்கிருந்த டாக்டர் சிகிச்சை வழங்க மறுத்துள்ளார். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பிணை வழங்கப்பட்ட பின்பே கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதி ஒருவருக்கே இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி சிகிச்சையளிப்பார்கள் என்பதே மக்கள் எழுப்பும் கேள்வியாகும்.

இந்த வைத்தியசாலை டாக்டரின்  இச்செயற்பாடு வைத்திய சேவையையே களங்கப்படுத்தும் ஒரு செயலாகும். இவ்வைத்தியசாலையில் இத்தினம் பணிபுரிந்த டாக்டர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைத்தியத்துறை போன்ற ஓர் உயர் தொழிலிலீடுபட்டுள்ளவர்கள் இப்படி செயற்படுவது மனிதாபிமானத்திற்கு எதிரான ஒரு செயற்பாடாகும்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள்:-

 இது தொடர்பாக விசாரணை நடத்தி வைத்திய சேவைக்கு களங்கம் ஏற்படுத்திய டாக்டர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருப்பதற்கு உறுதி செய்வது சுகாதார அமைச்சர் முன்னுள்ள பொறுப்பாகும்.

Previous Post Next Post