சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே வகித்துக்கொண்டிருக்கின்றார். அதனை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கவேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டிலிருக்கும் சரத் பொன்சேகா நாடு திரும்பியதும் அதனை அவருக்கு வழங்குவதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
கேள்வி: சட்டம் ஒழுங்கு அமைச்சில் காணப்படும் குழப்பம் எப்போது தீர்க்கப்படும்?
பதில்: அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அந்தப் பதவியை வகிக்கிறார். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சட்டம் ஒழுங்கு பதிவியை வகித்திருக்கின்றார்.
கேள்வி: சரத் பொன்சேகாவிற்கு இந்த அமைச்சுப் பதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கின்றதா?
பதில்: அவர் தற்போது நாட்டில் இல்லை. இரண்டு வாரங்களில் அவர் நாடு திரும்பியதும் அது குறித்து ஆராயப்படும். அவருக்கு இந்த அமைச்சை வழங்குவதற்கு ஆதரவும் இருக்கின்றது எதிர்ப்பும் இருக்கின்றது. எனினும் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் .
கேள்வி: ரணில் விக்கிரமசிங்க பிணை முறி விசாரணைக்குழுவிற்கும் சென்று வந்தவர். அவர் பதவியை வகிப்பது பொருத்தமாக இருக்குமா?
பதில்: அதில் அவர் குற்றவாளியாக கருதப்படவில்லை. எனவே எந்தப் பிரச்சினையும் இல்லை. எவ்வாறெனினும் அவர் இருவாரங்களுக்குத்தான் இந்தப் பதவியை வகிப்பார். அதன் பின்னர் என்னசெய்வது என்று குறித்து ஆராயப்படும்.
கேள்வி: அப்படியாயின் சரத் பொன்சேகாவிற்கு இதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு விட்டதா?
பதில்: அது தொடர்பில் ஆராயப்படுகின்றது. அதற்கான சாத்தியமும் இருக்கின்றது.
கேள்வி: சுதந்திரக்கட்சி அமைச்சரவை மாற்றத்தில் ஏன் பங்கெடுக்கவில்லை?
பதில்: அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படுகின்றன. பின்னர் அதுகுறித்து ஆராயப்படும்.
கேள்வி: ஒரு அமைச்சரவையைக் கூட ஒழுங்காக மாற்றியமைக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லையே?
பதில் : இது தேசிய அரசாங்கம். இங்கு முரண்பாடுகள் பிரச்சினைகள் ஏற்படும். அதனை சமாளித்துக்கொண்டு பயணிக்கவேண்டும். முன்னேற்றமடைந்த நாடுகளில் கூட இவ்வாறான நிலைமைகள் உள்ளன. இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்துள்ளன எவ்வாறெனினும் நாங்கள் தொடர்ந்து இந்த பயணத்தை தொடருவோம்.
கேள்வி ; மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்துள்ளதா?
பதில்: தேசிய அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் விடயங்களை முன்னெடுத்து செல்கின்றோம்.
கேள்வி: எனினும் அரசாங்கத்தினால் உள்ளூராட்சி மன்றங்களைக் கூட இன்னும் நிறுவ முடியவில்லையே?
பதில்: இம்முறை புதிய தேர்தல் முறையில் இந்தத் தேர்தல் நடந்தது என்பதை மறக்கவேண்டாம். எனவே அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய தேர்தல் முறைமை என்பதால் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனை தீர்த்துக்கொண்டு பயணிக்கவேண்டும்.
கேள்வி: தேர்தல் முறையில் குழப்பமுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?
பதில்: ஆம் அதில் பிரச்சினை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் ஆராய வேண்டியிருக்கின்றது.
கேள்வி: ஏன் சுதந்திரக்கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவையில் பதவி ஏற்கவில்லை?
பதில்: அதனை ஜனாதிபதியிடமே கேட்கவேண்டும்.
கேள்வி: பிரதமர் ரணில் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவக் குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி கோரினாரா?
பதில்: அது தொடர்பில் நீண்டநேரம் ஆராயப்பட்டது. இன்னும் ஒன்றரை வருடத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது. எனவே உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். அனைத்து விடயங்களையும் இந்த குழு ஊடாக செய்தால் காலதாமதம் ஏற்படும்.
கேள்வி: அப்படியாயின் இந்தக்குழுவை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதா?
பதில்: இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
கேள்வி: ஜனாதிபதி நியமித்த சரத் அமுனுகம குழு என்ன செய்கின்றது?
பதில்: குறிப்பிட்ட சில விசேட திட்டங்கள் தொடர்பில் அந்தக்குழு ஆராய்கின்றது.
கேள்வி: பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் நீங்கள் என்ன செய்யவீர்கள்?
பதில்: அதனை அப்போது பார்ப்போம்
கேள்வி: டெப் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளாரே?
பதில்: நாங்கள் அதனை நிறுத்தவில்லை. மாறாக முன்னுரிமை அளிக்கவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றோம்.
கேள்வி: நீங்களும் உறுப்பினராக இடம்பெறுகின்ற ஒரு குழுவொன்று பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கு எத்தனை யோசனை கிடைத்துள்ளன?
பதில்: 60யோசனைகள் கிடைத்துள்ளன. அதனை விரைந்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்போம்.
கேள்வி; அமைச்சரவை மாற்றத்தில் பலர் விரக்தியுடன் இருப்பதாக தெரிகிறதே?
பதில்: அமைச்சரவை மாற்றம் வரும்போது அமைச்சர்கள் விரக்தி அடைவது வழமையான விடயமாகும். 2010 ஆம் ஆண்டு நான் மீன்பிடி அமைச்சராக பொறுப்பேற்றபோது வேறு பல அமைச்சர் கவலையடைந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட சுகாதார அமைச்சு தொடர்பில் கவலை அடைந்தார். அவர் அன்று கண்ணீர் வடித்ததை நான்கண்டேன். காரணம் எவருமே உடனடியாக மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
கேள்வி: அமைச்சரவை மாற்றத்தில் பொருத்தமற்ற இணைப்புக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உயர் கல்வி அமைச்சும், நெடுஞ்சாலைகள் அமைச்சும் இணைக்கப்பட்டுள்ளமை சரியானதா?
பதில்: இது தொடர்பில் ஒரு முறைமை அவசியம் என்பதை நானும் ஏற்கின்றேன். விஞ்ஞான ரீதியான அமைச்சரவை உருவாக்கவேண்டியது அவசியமாகும். சில விடயங்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். ஆனால் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தேசிய அரசாங்கம் எனும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது வழமையாகும்.