சத்தார்
பிரபல சிறுகதை, நாவல் இலக்கிய எழுத்தாளரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்வதேச விருதுகள் பெற்ற ஒரு படைப்பிலக்கிய கர்த்தாவாகக் திகழ்கிறார். சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆக்க இலக்கியங்கள் படைத்து வரும் இவர், எந்தவொரு சம்பவத்துக்கும் புதுமெருகேற்றி, அதற்கு இஸ்லாமியப் கோட்பாடுகளையும் புகுத்தி சுவைபட வாசகர்களுக்கு வழங்குவதில் வல்லவர். இவரது மொழி வளத்தால் வாசகர்கள் கவர்ந்து ஈர்க்கப்படுகிறார்கள். சிங்கள மொழி ஊடாக இஸ்லாமியப் படைப்பிலக்கியங்களை உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்து வருகிறார். மிகவும் அபரிமிதமான பொறுப்புணர்வுடன் சிரமங்களையும் பொருட்படுத்திக் கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நாவல், சிறு கதைகளை ஊடகங்கள் ஊடாக சிங்கள வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். இவருடன் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட செவ்வியின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.
கே: நீங்கள் ஓர் எழுத்தாளர் என்ற வகையில், இஸ்லாமிய இலக்கியம் தொடர்பாக அதிக கரிசனை காட்டிவருவதன் பின்னணி என்ன?
சிறு பராயத்திலிருந்தே எனக்கு எழுத்தார்வம் இருந்து வந்துள்ளது. எனது 16 ஆவது வயதிலே முதலாவது நாவலை வெளிக்கொணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக நான்கு நாவல்களை எழுதியுள்ளேன். அவையெல்லாம் சிறுபிள்ளை விளைத்த வேளாண்மையாகவே இப்போது நான் கருதுகிறேன். தொடர்ந்து நூல்கள் வாசிப்பதன் மூலம் என்னை வளர்த்துக் கொண்டேன். ஆனால் எனது இளமைக் காலங்களில் வாசித்த எந்தவொரு நூலிலாவது முஸ்லிம் சான்றுகள் எதனையும் கண்டு கொள்ள முடியவில்லை. சற்று வயதேறிய பின்னர்தான் முஸ்லிம் நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
சிங்கள மொழி வாசகர்கள் மத்தியிலே இத்தகைய நூல்கள் பிரபல்யம் பெற்றிருந்தன. முஸ்லிமல்லாத எனது தோழிகள் மேற்படி நூல்களைக் கொண்டு வந்து என்னிடம் கருத்துகளைக் கேட்கத் தலைப்பட்டனர். நான் முஸ்லிம் பாடசாலையில் கற்றபோதிலும் இஸ்லாம் சமயம் குறித்த போதிய சிந்தனை என்னிடம் இருக்கவில்லை. பிரபோதய மாதாந்த சஞ்சிகையைப் படித்ததன் மூலம் சில விடயங்கள் குறித்து தெளிவைப் பெற்றுக் கொண்டேன். பரீட்சையில் தேர்ச்சி பெறுவதற்கே சமய அறிவுகளைத் திரட்டிப் பெற்றுக் கொண்டேன். இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியென்ற தெளிவு அப்போது என் மனதில் தோன்றவில்லை.
பெண் மஹ்மூதியின் ‘தெவியன்கே அடயவிய’ (Not without my daughter) ‘காந்தாரயே குசும’ (Desert flower) ஆகிய நூல்களைப் படித்த பின்னர், அவை ஒருவரின் அனுபவத்தின் வெளிப்பாடு அல்லது சமூகமொன்றின் சடங்கு, சம்பிரதாயம் அன்றி, இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அல்ல என்ற எண்ணமே என் மனதில் தோன்றின. பரப்பப்பட்டு வரும் இந்த தவறான கருத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எண்ணலானேன். எனக்கு குறிப்பிட்டளவு அறிவு இருந்ததனால் அவ்வாறு கால் பதிக்கவும் விரும்பவில்லை. நூலாக்கம் செய்வதில் உண்மையிலேயே அச்ச உணர்வே ஏற்பட்டது.
இஸ்லாம் சம்பந்தப்பட்ட முஸ்லிம்களது நல்ல பழக்க வழக்கங்கள் அடங்கிய நூலொன்றை யாராவது எழுதுவார்கள் என்றே நான் நினைத்தேன். அதனால் அதனைப் பற்றி நான் எழுதவில்லை. அத்துடன் பிற சமூகம் குறித்து எழுதும் போது தன்னையறியாமலே தவறுகள் நிகழ இடமுண்டு. எம்மால் எழுதப்படும் அனைத்து விடயங்களுக்கும் இந்த உலகத்திலும் மறுமையிலும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் எனக்கிருந்தது. இத்தகைய காரணங்களினால் நான் எழுத்துலகிலிருந்து சில வருடங்கள் தூரமாகியேயிருந்தேன்.
கே:ஆன்மீகப் பண்பை வளர்க்கும் வகையில் தானே மீண்டும் இலக்கிய உலகில் கால் பதித்தீர்கள்?
ஆம் அப்படித்தான். ஆன்மீகத்தை மையமாக வைத்தே இலக்கியம் படைக்கலானேன். எந்த ஊர், பெயரையும் பயன்படுத்தாது பிறந்த குழந்தையொன்று தன் கண்களால் உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் நூலை எழுதினேன். உலகம் தானாக உருவாகவில்லை என்ற கருத்தை அதில் பிரதிபலிக்கச் செய்தேன். பின்னர் 2007 ஆம் ஆண்டில் இஸ்லாத்தின் சிறப்புகளை வெளிக்கொணரக்கூடிய படைப்புகளை ஆக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்விட்டது.
இந்த காலகட்டத்தில்தான் நிம்மதியாக எழுத ஆரம்பித்தேன். பாசம் நிறைந்த முஸ்லிம் குடும்பக் கதையொன்றை இலகுவான நடையில் சிங்கள வாகசர்களுக்கு வழங்கினேன். இது இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒரு பங்களிப்பாக அமைந்தது. நாவல்கள் மூலம் இஸ்லாத்தை தெளிவுபடுத்தவும் இதுவொரு வாய்ப்பாக அமைந்தது. பெரும்பாலான புத்தகங்களின் உள்ளடக்கங்கள் வாசிக்கக்கூடியனவாக இல்லை. நான் ஒரு புத்தகப் பூச்சியாகவே இருந்தேன். ஆனால் ஒருசில புத்தகங்களில் உள்ள விடயங்கள் வாசகர்களின் மனதை பாதிக்கச் செய்வனவாக உள்ளன. வாலிப உள்ளங்களில் திருமணத்திற்கு முன்னர் காதல் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியனவாக விவரணங்கள் ஆக்கப்படுகின்றன. ஆனால் மணமுடித்ததன் பின்னரான குடும்ப ஒற்றுமைக்கான வழிவகைகளை முன் வைப்பது மிகவும் குறைவாகவே உள்ளன.
பெரும்பாலான நூல்கள் முறையற்ற விதத்தில் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் நகர்த்திச் செல்லப்படுகின்றன. நல்வாழ்வுக்கான தகவல்கள் பரிமாறப்படுவதும் குறைவாகவே இடம்பெறுகின்றன. எனவே இத்தகைய வாசகங்களைப் படிப்பதில் நின்றும் வாசகர்களைத் தடுக்கும் வகையிலான ரசனை மிகு ஆக்கத்திறமை எங்களிடம் இருக்க வேண்டும்.
கே:உங்கள் ஆக்கங்களினூடாக சிறந்த வாசகர் வட்டமொன்று உருவாக்கம் பெற்றிருக்கின்றதா?
உண்மையிலேயே எனது நூல்களைப் படித்தோர் மத்தியில் சிந்தனைத் தெளிவொன்று உருவாக்கப் பெற்றிருப்பதை என்னால் உணர முடிகிறது. ‘புதின்ன இடதென்ன’ ஆன்மீகத்துக்கு வழிவிடுங்கள். நூல் ஊடாக பிறந்த குழந்தைக்கும் வாழும் உரிமை உண்டு என்ற தகவலை சமூகத்தின்முன் கொண்டு சென்றிருக்கிறேன். இந்நூலின் வாசகர்கள் உள்ளங்களில் எனது கருத்துகள் தாக்கம் செலுத்தியதைக் கண்டேன்.
கருச் சிதைவு செய்வது பாவமான காரியம் என்பதை ஏற்றுக்கொண்டனர். இந்நூலை வாசித்த தாதியொருவர் யதார்த்த பூர்வமான விடயங்களை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளதாக கருச்சிதைவுப் பணிகளில் ஈடுபட்ட தனது அனுபவ உண்மைகளை முன்னிறுத்தி எனது நூலை அங்கீகரித்தார்.
எனது மற்றொரு படைப்பான ‘டியர் டயரி’ சிறுகதையை வாசித்த இந்தியாவைச் சேர்ந்த பொறியியல்துறை மாணவர் ஒருவர், இக்கதை மூலம் அவர் அடைந்த மனமாற்றம் பற்றி நீண்ட கடிதமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அவர் இக்கதையைப் படிக்கும் வரை முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரியாத நிலையில் அதற்கெதிரான சிந்தனையுடன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினருடன் வைராக்கிய மனப்பான்மையுடனே காலம் கடத்தியதாகவும் தனது தவறான வழிமுறைக் குறித்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்ட எனது ஆக்கம் தற்செயலாக கிடைக்கப்பெற்று வாசித்ததாகவும் வாசித்த பின்னர் அன்றிரவு முழுவதும் அழுது பிராயச்சித்தம் தேடியதாகவும் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டிருந்தார். இப்போது அவர் இஸ்லாமிய நெறி முறைக்கிணங்க வாழ்வதோடு, அவரது குடும்ப வாழ்வும் மிகவும் திருப்தியான முறையில் நடந்தேறுவதாகவும் தனது திருந்திய நிலைப்பாட்டையும் குறிப்பிட்டிருந்தார்.
கதைக்கெடுத்துக் கொள்ளும் கருமூலம் வாசகரின் தவறான எண்ணக் கருக்களையே மாற்றியமைக்க முடியும். நூல் வாசிப்போருக்கும் வாசிக்காதோருக்கும் இடையே பாரிய ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. நாவல்கள், சிறுகதைகள் மூலம் மக்கள் வாழ்விலே மாற்றம் ஒன்றைக் கொண்டுவர முடியும் என்பதே எனது கருத்தாகும். கதைகளின் ரசனையூடாக மேலான தகவல் ஒன்றை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வது மிகவும் இலகுவான காரியமாகும்.
கே: நீங்கள் வேலைப்பளுவுக்கும் கடும் சிரமங்களுக்கும் மத்தியில் இலக்கியப் பணிபுரிந்து வருகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?
உண்மையிலேயே நான் மனத்திருப்தியடைகிறேன். என்னால் ஏதும் சிறியதொரு பாடம் கற்றுக்கொள்ளக் கிடைத்தாலும் அதனை தான் பெரிய ஒரு விடயமாகவே எண்ணி நிம்மதியடைகிறேன். இதுவும் ஒரு ஸதகதுல் ஜாரியாவென்பதும் மற்றுமொரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மரணித்த பிறகும் கூட யாரும் எனது நூலைப் படித்து அதன்படி நடப்பார்களேயானால் அவர் நன்மைகள் பெறுவதோடு எனக்கும் நன்மைகள் வந்து சேர்வது உறுதி. இதனால் எமது எதிர்கால சந்ததிகளுக்காக எனது எழுத்துப் பணியைத் தொடர உள்ளேன்.
கே: முஸ்லிம் வாலிப, யுவதிகள் இன்று வாசிப்பில் ஆர்வம் காட்டுவது குறைவு. இது எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?
முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக அருளப்பட்ட வசனம், இக்ரஃ படிப்பீராக என்பதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள எமது சமூகம் வாசிப்பில் பின் நிற்பது குறித்து மிகவும் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.
நாம் எவ்வளவு தூரம் வாசிக்கிறோமோ, அந்தளவுக்கு எமது அறிவு கூர்மையடைகிறது. வாசிப்பின் போது எழும் பிரச்சினைக்குத் தீர்வு தேட உந்தப்படுகிறோம். இதனாலும் எமது அறிவு விருத்தியடைகிறது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறுண்டு. ஆனால் இங்குள்ள சகோதர இனங்களுக்கு இஸ்லாமிய முறைமைகள் பற்றி மிகவும் சொற்ப அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், எங்களுடைய வழிமுறைகளையெல்லாம் நாம் எங்களுடைய வீடுகளுக்குள்ளே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். நாம் ஏனையவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிப்பதுமில்லை.
எங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வதுமில்லை. இவ்வாறிருக்கையில், இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாக முடிகிறது? நவீன தொழில்நுட்பத்தின் வரவால் வாசிப்பு ரசனை குறைந்து விட்டதாக ஒருசிலர் முணுமுணுக்கிறார்கள். இது போலிச் சிந்தனையாகும். வாசிப்பதற்கு முன்பைவிட வசதி வாய்ப்புகள் அதிகரித்திருப்பதென்பதே உண்மையாகும். இலத்திரனியல் நூல்கள் இருக்கின்றன. குறிப்பிடத்தக்களவு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல வர்ணங்களில் கவர்ச்சிகரமான பத்திரிகை, சஞ்சிகைகள் அச்சாகிக் கொண்டுதான் வருகின்றன.
தேவைப்படும் பட்சத்தில் கடலை விற்கும் பையனின் கரங்களிலும் நூல்கள், பத்திரிகை, சஞ்சிகைகள் இருப்பதைக் காணலாம். வீடுகளில் தான் தவறுகள் நடக்கின்றன. சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களை சிறு பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை தவிருங்கள். அப் பணத்திற்கு கண்ணைக் கவரும் கதைப் புத்தகங்கள், சிறு சஞ்சிகைகள், இப்போது சர்வ சாதாரணமாக சாலைகள்தோறும், பஸ், புகைவண்டிகளில் எல்லாம் விற்கப்படுகின்றன. வாங்கிக் கொடுத்து வாசிப்புணர்வைத் தூண்டச் செய்யுங்கள்.
பிள்ளைகளுக்கு ஏதும் அன்பளிப்புச் செய்வதாயின் சிறு புத்தகங்களையே வாங்கிக் கொடுங்கள். சிறு பிள்ளைகள் வாங்கிக் குறிப்பிட்ட புத்தகங்களை கிழித்தால் அல்லது எழுதுகோலால் கிறுக்கித் தள்ளினாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டாம். அத்தகைய செயற்பாடுகளும் ஒருவகைப் பயிற்சிதான். புத்தியுள்ள வயதையடைந்ததும் அவர்கள் புத்தகங்களைச் சேதப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வார்கள்.
கே:பாடசாலை, பள்ளி, மத்ரஸா மற்றும் இஸ்லாமிய நிலையங்களில் எல்லாம் பிள்ளைகளின் வாசிப்பை அதிகரிக்கச் கொள்வதற்காக என்ன செய்ய வேண்டும்?
மேற்படி இடங்களில் எல்லாம் ‘Book Reading Sessions’ ஏற்படுத்திக் கொள்வது நல்லது. நான் பிரிட்டிஷ் கவுன்ஸிலில் சில காலம் பணியாற்றியதுண்டு. அங்கு வாரத்தில் ஒரு நாள், ஒரு மணி நேரம் ‘Read – Aloud’ என்ற வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அத்துடன் எழுத்தாளர்கள் வரழைக்கப்பட்டு, பிள்ளைகளுக்கு கதை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது.
இத்தகைய செயற்றிட்டங்கள் மூலம் மேற்படி துறைக்குப் பிள்ளைகளை உருவாக்க முடியும். புத்தகங்கள் எப்போதும் கிடைக்கக் கூடியவாறான சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாசிகசாலை மேலதிகமாக ‘Reading Corner’ ஒன்றை நடாத்தவும் முடியும். மாணவர்களால் இலகுவில் கிரகித்துக் கொள்ளக் கூடிய நூல்களை வாங்கிக் கொடுக் வேண்டும். மேல் நாட்டுக் குழந்தைகளுக்குப் பொருத்தமான நூல்கள் எங்கள் பிள்ளைகளுக்குப் பொருந்தாது. அவர்களது கலாசாரம், வாழ்க்கை வட்டம் வேறு. இங்குள்ள பண்பாடுகள் வேறு. இத்கைய நூல்கள் விடயத்தில் பெற்றோருக்கு கவனம் தேவை. அத்தகைய நூல்களை வாசிக்கும் பிள்ளைகள் மாற்றமானதொரு உலகைத்தான் கண்டு கொள்வார்கள்.
கே: நீங்கள் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி வருகிறீர்கள். இப்புது ஊடகங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது எப்படி.
நான் அடிக்கடி குறிப்பிட்டு வருவது போன்று, Online, Offline என்று இரு வாழ்க்கை முறைகள் இருக்க முடியாது. எமது சொல், செயல்கள் அனைத்துக்கும் நாம் பொறுப்புக் கூற வேண்டும். – சமூக வலைத்தளங்கள் என்பது பொழுதுபோக்குவதற்காகப் பாவிக்கக் கூடிய ஒரு ஊடகமன்று. அதன் மூலம் எமது முன்னேற்றங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாடு, தூர இடங்களிலுள்ள எமது உறவினர் நண்பிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளவே நான் ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் ஈடுபட்டேன். அதன் பிறகு படிப்படியாக எமது எழுத்துத்துறையைப் புகுத்திக் கொண்டேன்.
அதன் ஊடக சர்வதேச ஆண், பெண் எழுத்தாளர்களுடனான அறிமுகம் கிடைத்தது. அவர்களின் ஆற்றல்களைப் படித்துக் கொண்டேன். அவர்களிடமிருந்து எழுத்துத்துறை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். எழுத்துலகப் பயணத்துக்குத் தேவையான விடயங்களைப் பெற்று புடம் போட்டுக் கொண்டேன். எதனைச் செய்யவும் அடுத்தவர் சிந்தனையும் மிகவும் இன்றியமையாததாகும். நான் எனது நூல்கள், வெளியீடுகளைப் பதிப்பித்தல், அச்சிடல், அவற்றை விற்பனை செய்தல் உள்ளிட்ட எல்லா விடயங்களையும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தியே மேற்கொண்டு வருகின்றேன்.
கே:எழுத்துப் பணியில் ஈடுபடும் நீங்கள் இளைஞர் விவகாரம் மற்றும் பொதுநல சேவைகளிலும் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இதுவரை நீங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து……?
2011 ஆம் ஆண்டு Li words எனும் முகநூல் பக்கம் ஒன்றை, பயிலும் எழுத்தாளர்களுக்காகத் திறந்து வைத்தேன். படிப்படியாக ஆண், பெண் எழுத்தாளர்கள் அந்தப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தனர்.
Spreading peace in a Creative way எனும் தொனிப்பொருளில் எங்கள் முகநூல் பக்கத்தில் சமூகத்துக்கான போதனைகளை வழங்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக இஸ்லாமிய கோணத்திலிருந்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், துணுக்குகள், கட்டுரைகள் என்பவற்றால் அந்த முகநூல் பக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான நாவல்கள் நன்கு ஜனரஞ்சகமாகின. தீனிடேல்ஸ் இஸ்லாமிய கோணத்தில் மாற்றி எழுதப்பட்ட தேவதைக் கதைகள் நன்கு பிரபல்யமாகிப் பிரகாசித்தன.
Spreading peace in a Creative way எனும் தொனிப்பொருளில் எங்கள் முகநூல் பக்கத்தில் சமூகத்துக்கான போதனைகளை வழங்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக இஸ்லாமிய கோணத்திலிருந்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், துணுக்குகள், கட்டுரைகள் என்பவற்றால் அந்த முகநூல் பக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான நாவல்கள் நன்கு ஜனரஞ்சகமாகின. தீனிடேல்ஸ் இஸ்லாமிய கோணத்தில் மாற்றி எழுதப்பட்ட தேவதைக் கதைகள் நன்கு பிரபல்யமாகிப் பிரகாசித்தன.
எழுத்துலகப் பயிற்சியில் எழுதிக் கொண்டிருந்த இளம் வாலிபர், யுவதிகள் தயக்கம், சந்தேகங்கள் இன்றி அவர்களது படைப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். Edutaiment தரத்தில் வைத்து மதிக்கப்படும் அறிவியல் சஞ்சிகைக்கு ஈடாக இஸ்லாமிக் இன்ஸ்பயரின்க் வேர்ட்ஸ் li words உம் ஏராளமானனோரை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு மே மாதம் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக நிதியுதவி திரட்டுட்டும் பணியனில் Li words, Islamic Student movement (SLISM) உடன் Launch Good என்ற பெயரில் Fundraising இணையத்தளத்துடன் இணைந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டது. அதில் 8150 டொலர்கள் அளவிலான நிதி வந்தடைகிறது. அப்பணம் SLISM ஊடாக 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இப்பணிகளுக்கு புறம்பாக நவீன ஊடகங்களைப் பயன்படுத்துவதில் எழுத்துலகப் பணியில் ஈடுபடும் முறைமைகள் குறித்த பயிற்சி ஆலோசனைகளை இளம் சந்ததியினருக்கு வழங்கும் வேலைத்திட்டங்கள், செயலமர்வுகள், கலந்துரையாடல்கள், நடத்தியும் வருகிறோம். பாடசாலைகளில் Reading Sessions என்பனவும் நடாத்தி வருகிறோம்.
கே: உங்கள் பணிகளுக்காக இதுவரை நீங்கள் பெற்றுக் கொண்ட விருதுகள் குறித்து…..?
அச்சிட்ட நூல்களை விட அச்சுவாகனம் ஏறாத ஆக்கங்கள் ஏராளம். அவையாவும் பிரசுரம் காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இதுவரையில் வெளிவந்துள்ள நூல்களாவன: புதின்ன இடதென்ன, செனஹஸே ரித்மய, Li – Inscribed (Anthology of li words) Nothing but love, A Heartless summer (E book short story), I' m fasting this Ramadan! (Children’s Picture book)
Autumn Leaves படைப்புக்கு 2012 ஆம் ஆண்டு போட்டிக்கு வந்த 10,000 ஆக்கங்களில் 2,000 க்குள் தெரிவானது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா நடாத்திய தேர்வில் எனது சிறுகதை முதலிடத்தைப் பெற்றது. இப்படிப் பல விருதுகள், பரிசில்கள் கிடைத்துள்ளன.
Autumn Leaves படைப்புக்கு 2012 ஆம் ஆண்டு போட்டிக்கு வந்த 10,000 ஆக்கங்களில் 2,000 க்குள் தெரிவானது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா நடாத்திய தேர்வில் எனது சிறுகதை முதலிடத்தைப் பெற்றது. இப்படிப் பல விருதுகள், பரிசில்கள் கிடைத்துள்ளன.
கே: இறுதியாக உங்களைப் பற்றி சிறிய அறிமுகம் தாருங்கள்?
பதில்: சிறு வயதிலிருந்தே எனக்கு எழுத்து ஆர்வம் இருந்து வந்தது. இப்போது நான் மூன்று பிள்ளைகளின் தாய். எனது எழுத்துத் துறைக்கு எனது தாய் தான் அடித்தளம் இட்டார். எனது தந்தையும் அதற்கு உறுதுணையாக அமைந்தார். திருமணத்தின் பின்னர் எனது கணவரின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கதாகும். எனது குடும்பத்தினர், தோழர், தோழிகள் தரும் ஊக்குவிப்பும் சொல்லும் தரமன்று.
எழுத்துத் துறையில் உயர்ந்து நிற்கும் நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்தான். எனது சமூகம் குறித்து பொறுப்புணர்வு எப்போதும் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எனது உள்ளத்தால் மட்டுமன்றி எனது அறிவிலாலும் சமூகத்துக்கு ஏதும் நற்பணிபுரிய வேண்டும் என்ற ஆவல் எனக்கிருக்கிறது. இப்பூமியில் பிறந்த எங்கள் அனைவருக்கும் இவ்வுலகின் முன்னேற்றம் குறித்து உழைக்க வேண்டிய கடப்பாடுள்ளது. அந்த வகையிலே எதிர்காலத்திலும் நான் மேற்கொண்டுவரும் பணியைத் தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
எழுத்துத் துறையில் உயர்ந்து நிற்கும் நான் ஒரு சாதாரண குடும்பப் பெண்தான். எனது சமூகம் குறித்து பொறுப்புணர்வு எப்போதும் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எனது உள்ளத்தால் மட்டுமன்றி எனது அறிவிலாலும் சமூகத்துக்கு ஏதும் நற்பணிபுரிய வேண்டும் என்ற ஆவல் எனக்கிருக்கிறது. இப்பூமியில் பிறந்த எங்கள் அனைவருக்கும் இவ்வுலகின் முன்னேற்றம் குறித்து உழைக்க வேண்டிய கடப்பாடுள்ளது. அந்த வகையிலே எதிர்காலத்திலும் நான் மேற்கொண்டுவரும் பணியைத் தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.