இன்று சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பிரதி தவிசாளராக சு.காவைச் சேர்ந்த ஜெயச்சந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பிரதி தவிசாளர் பதவி என்பது முக்கியமான ஒரு பதவி. தவிசாளருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ள பதவியாகும். அது தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு செல்வது, எதிர்கால சம்மாந்துறை வரலாற்றில் வேறு வியாக்கியானங்களை வழங்கவல்லது.
தற்போது சம்மாந்துறை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் கோரியிருக்கின்ற, தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தனிச் சபைக்கு, இது பெரும் உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை. இது பற்றி விரிவாக ஆராய முடியும். தேவை ஏற்படின் விரிவாக ஆராயலாம். இவ்விடத்தில், நான் சுட்டிக்காட்ட விரும்பும் விடயம், சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை சம்மாந்துறையில் அரங்கேறிய ஒரு வரலாற்று துரோகமாகும்.
சம்மாந்துறை பிரதேச சபையில் யாருமே பெரும்பான்மை ஆசனங்களை பெறாததன் காரணமாக, இரு கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இன்று மு.காவுக்கும், அ.இ.ம.காவுக்கும் இடையில் பாரிய அரசியல் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இவர்கள் இருவரும் சு.காவை வளைத்து போடுவதில் ஆர்வம் காட்டியிருந்தனர். அது அ.இ.ம.காவிற்கு சாதகமாக அமைந்திருந்தது. இதன் போது சு.காவினர் பிரதி தவிசாளர் பதவியை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டனர். இதன் பிரகாரமே சு.காவை சேர்ந்த ஒரு தமிழ் சகோதரர் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் சு.காவின் சார்பில் வட்டார ரீதியாக இருவரே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களும் இருவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். விகிதாசார பட்டியலில் இரு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வட்டாரத்தை வெற்றி கொண்டவர்களே, பிரதி தவிசாளருக்கு தகுதியானவர் என்ற வகையில் குறித்த தமிழ் சகோதரர், பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டிருக்கலாம். இந்த கோணத்தில் நோக்குகையில், இது நியாயம் போன்று தோன்றலாம்.
சு.கவின் விகிதாசார பட்டியலில் தெரிவான இருவரும் புண்ணியத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல. சுதந்திர கட்சி சார்பில் தேர்தல் கேட்டிருந்த முஸ்லிம்கள் வட்டாரங்களை வெற்றி கொள்ளாது போனாலும், முஸ்லிம் பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில், முஸ்லிம் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தான், விகிதாசார பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட இரு முஸ்லிம்களும்.
இன்னும் சொல்லப்போனால், கடந்த தேர்தலில் சு.காவுக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழ் வாக்குகளை விட முஸ்லிம் மக்களின் வாக்குகளே அதிகம். தெரிவு செய்யப்பட்டிருந்த இருவரும் பெற்றுக்கொண்ட வாக்குகள், ஒரு உறுப்பினருக்கு தேவையான தகமை எண்ணை கூட எட்டியிருக்கவில்லை. ஒரு தகமை எண்ணை எட்டாது வட்டாரத்தில் தெரிவு செய்யப்படும் போது, அது விகிதாசார உறுப்பினர் எண்ணிக்கையை பாதிக்கும்.
அவர்களின் தகமை எண் வாக்கு குறைவினால் ஏற்பட்ட பள்ளத்தை, முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே மூடி மறைத்திருந்தனர். எனவே, சு.கவிலிருந்து ஒரு முஸ்லிமே, பிரதி தவிசாளர் பதவிக்கு தகுதியானவர். விகிதாசார பட்டியல் உறுப்பினர் இருவரில் ஒருவரை பிரதி தவிசாளராக நியமித்திருந்தாலும், இந்த விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம். சு.கவை சேர்த்த முஸ்லிம் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டு குவித்து, தமிழர்களுக்கு பிரதி தவிசாளர் பதவி பெற்றுக்கொடுத்துள்ளனர். இங்கு இடம்பெற்றுள்ள துரோகத்தின் பிரதான பங்கு சு.கவை சேர்ந்த முஸ்லிம்களையும் சாரும்.
தமிழ் மகன் ஒருவரை நியமித்தே சம்மாந்துறை ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமுமில்லை. சு.கவானது தமிழ் சகோதரர் ஒருவரைத் தான் பிரதி தவிசாளராக நியமிக்க விரும்பம் கொண்டிருந்தால், நாங்கள் முஸ்லிம்கள், ஒரே உம்மத்தினர் என்ற சிந்தனையை முன் நிறுத்தி மயிலும் மரமும் ஒன்றிணைந்திருக்கலாம். இது தான் நேரிய சிந்தனைகள். பிரதி தவிசாளர் பதவி தமிழர் ஒருவருக்கு செல்லாது தடுக்கும் வழி இருந்தும், அவற்றை பற்றி சிந்திக்காது,
ஆட்சியமைப்பிலேயே எமது கட்சிகள் கவனம் செலுத்தின. எப்படியோ ஆட்சி அமைத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் ஒன்றிணைவை சாத்தியமாக்க மக்களின் அழுத்தம் வேண்டும். இவ்வாறு செய்யுமாறு மக்களும், எமது அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் வழங்கவில்லை. இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளதால், இவ் விமர்சனத்தை அவர்களை நோக்கி திருப்புவது நியாயமல்ல.
மு.கா ஆட்சியமைத்திருந்தாலும் இதே நிலை தான் ஏற்பட்டிருக்கும். இங்குள்ள பிரதான பிரச்சினை, முஸ்லிம் சமூகம் அரசியலில் பிரிந்து நிற்பதே. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பிரிந்து நிற்பது எமது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை சம்மாந்துறை விடயத்திளிருந்தும் அறிந்துகொள்ளலாம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.