இனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் தோற்றும்போது பரீட்சை எழுதமுன் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல புதிய யுக்திகளை, மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
2001ஆம் ஆண்டிற்குப் பின்னரான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.
ஒகஸ்ட் புலமைப்பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதே போல க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்திமுடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இனிமேல் கபொ.த சா.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற விரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தரம் 6- 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழினுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு கல்வியியல் கல்லூரி பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.