Top News

“மலட்டு மாத்திரை” ஆங்கில மருத்துவத்தில் இதுவரை இல்லை - சுகாதார அமைச்சு


உலகில் மேலைத்தேய மருத்துவத்தில் (ஆங்கில முறை மருத்துவத்தில்)  மருந்து மாத்திரை ஊடாக மலட்டுத் தன்மையை ஏற்படுத்த எந்தவொரு முறையும் இதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லையென அரச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார்.
தற்பொழுது அம்பாறையில் முஸ்லிம் உணவகத்தில் சர்ச்சையாக மாறியுள்ள மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை கலந்த உணவு பறிமாரல் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் உணவு தொடர்பில் சுகாதார அமைச்சின் கருத்தை பலரும் வினவியிருந்தனர்.
மருத்துவ ரீதியில் பிறப்பிலேயே நிரந்தரமாக பிள்ளைப் பாக்கியம் அற்ற நிலையையே “மலட்டுத் தன்மை” என கருதப்படுகின்றது.
மனிதர்களில் சிலருக்கு பிறப்பிலேயே பிள்ளைப் பாக்கியம் அற்ற நிலைமை காணப்படுகின்றது. இதற்கு குடும்ப பராமறிப்பு நிலையத்தினூடாக சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
மற்றும் சிலர் தங்களுக்கு குடும்பக் கட்டுக்கட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதற்காக சத்திர சிகிச்சை மூலம் நிரந்தர மலட்டுத் தன்மையை ஏற்படுத்திக் கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்த இரண்டு முறைமைகள் தொடர்பிலும் பொது மக்களுக்கான சேவையை வழக்க குடும்ப சுகாதாரப் பிரிவு செயற்படுகின்றது.
மேலைத் தேய மருத்துவ முறைமையில் (ஆங்கில மருத்துத்தில்) நடைமுறையில் சத்திர சிகிச்சை மூலமாக மட்டுமே மலட்டுத் தன்மையை ஏற்படுத்த முடியும் என்பது உறுதியான ஒன்றாகும். பெண்களுக்கு இதற்காக வேண்டி எல்.ஆர்.டி. சத்திரசிகிச்சை முறைமையும், ஆண்களுக்கு வாசெக்டமி (Vasectomy) சத்திர சிகிச்சை முறைமை மட்டுமே தற்பொழுது நடைமுறையில் உள்ளன.
இதுதவிர, ஆங்கில மருத்துவ முறைமையில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் எந்தவொரு சிகிச்சை முறைமையும் ஏற்படுத்தப்பட வில்லையெனவும் மருத்துவ நிபுணர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நடைமுறையில் சாத்தியமில்லாத குற்றச்சாட்டை வைத்து முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்திய இனவாதிகள் உண்மையை இப்போது அறிந்து கொண்டதன் பின்னர், இழப்புக்கு விலையாக எதனைக் கொடுக்கப் போகின்றார்கள் என்பது எல்லோரினதும் உள்ளங்களில் எழும் நியாயமான கேள்வியாகும்.
Previous Post Next Post