Top News

அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா விடுக்கும் ஜும்ஆ தொடர்பான முக்கிய அறிவித்தல்



( ஐ. ஏ. காதிர் கான் )

   நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு,  இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான புனித ஜும்ஆவுடைய தினமாகிய இன்று  ( 09 ) வெள்ளிக்கிழமை,  பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்திற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழு செயலாளர் அஷ்ஷைக் இல்யாஸ் மஹ்மூத்,  இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயமாக வேண்டிக் கொள்கின்றார். 

   அவர் அந்த விசேட வேண்டுகோளில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

1) ஜும்ஆவுடைய நேரத்தில் மஸ்ஜித்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபாரஸ்தலங்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துகொள்ளுமாறும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் சகோதரர்கள் ழுஹர்  தொழுகையைத் தொழுதுகொள்ளலாம். இவர்களுக்கு ஜுமுஆக் கடமையாகமாட்டாது.

2) ஓர் ஊரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மஸ்ஜித்களில் ஜும்ஆக்கள் நடைபெறும் வழமை இருந்தால், அம்மஸ்ஜித்களின் ஜும்ஆவுடைய நேரத்தை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்துரையாடி தேவைப்படின் வித்தியாசப்படுத்திக் கொள்ளலாம்.

3) முஸ்லிம்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்புப்  படையினருடன் ஒத்துழைப்பு, பண்பாடு, புரிந்துணர்வுடன் நடந்துகொண்டு தமது பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும்.

4) குத்பாப் பிரசங்கத்தையும் தொழுகையையும் ஜம் - இய்யாவினால் வழங்கப்பட்டுள்ள மாதிரி குத்பாவை முன்வைத்து, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் சுருக்கிக் கொள்ளுமாறும் வேண்டிக்  கொள்கின்றோம்.

5) தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள்,  அனைத்து முஸ்லிம்களையும் ஆழ்ந்த கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாக்கியிருக்கும் இந்நிலையில், அவர்களுக்கு மன ஆறுதலாகவும் முஸ்லிம்களின் உணர்வுகள்,  பாதகமான முறையில்  தூண்டப்படாமலும் குத்பாப் பிரசங்கத்தை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

6) நாட்டு முஸ்லிம்களினதும், உலக முஸ்லிம்களினதும் நிலைமைகள் சீராகி,  நிம்மதியாகவும் கண்ணியமாகவும்  வாழ துஆ, இஸ்திக்ஃபார், நோன்பு, ஸதகா, போன்ற நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மக்களைத் திசை திருப்புதல் வேண்டும்.

7) அவசரகால சட்டம் நாட்டில் அமுலில் உள்ளதால்,  ஜும்ஆ முடிந்தவுடன் நாட்டுச் சட்டத்தை மதித்து அமைதியாகக்  கலைந்து சென்று,  தத்தமது வேலைகளில் ஈடுபடுமாறும்  வேண்டிக் கொள்கின்றோம்.

Previous Post Next Post