Top News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி



கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தார். 
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இவ்வாறான சம்பவங்களினால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் எடுத்துரைத்தார். 

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்பு கொண்டு தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். பின்னர், ஜனாதிபதி மீண்டும் என்னுடன் பேசியிருந்தார். அவர் நேற்று திங்கட்கிழமை இரவு பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டு இராணுவம், அதிரடிப் படை மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு கடுமையான உத்தரவுகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தார். 

இதேவேளை, முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் நிதானமாக உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும். ஊர் தலைமைத்துவங்களுக்கு கட்டுப்பட்டு அவர்களது வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கின்ற அத்தனை சதிகாரர்களுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அத்துடன், உண்மைக்கு புறம்பான தகவல்களை பறப்பி மக்களை குழப்பும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் சரியான தகவல்களை மாத்திரம் பகிர வேண்டும். ‘இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் தீக்குளிப்பதாக’ உண்மைக்குப் புறம்பான தகவலொன்றும் பரப்பப்பட்டு வருகின்றன. நான் ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன். இவ்வாறான விடயங்களில் சமூகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - என்றார். 
Previous Post Next Post