அம்பாறைச் சம்பவத்தின் உண்மை நிலைமையை பெரும்பான்மைச் சமூகத்துக்கு தெளிவுபடுத்த முன்வந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வைத்திய நிபுணர்கள் ஆகியோருக்கும் சில ஊடகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்பவற்றின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
அம்பாறை வன்முறைச் சம்பவம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
எந்தவித அடிப்படையும் இல்லாத ஒரு காரணத்தை வைத்தே முஸ்லிம்களின் சொத்துக்கள் அம்பாறையில் அழிக்கப்பட்டுள்ளன. அடிப்படை அற்ற உண்மை என்பதை அரச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் உண்மைப்படுத்துகின்றது.
இச்சம்பவத்திலும் பொலிஸார் முரண்பாடான செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இது கடந்த அரசாங்க காலங்களிலும் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளின் போது இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கைக்கு இனியும் அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.
இனவாதத்தை தூண்டியவர்களுக்கும், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கும் அதற்கு ஒத்துழைத்த பாதுகாப்புத் துறையினருக்கும் தகுந்த தண்டனையை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது இனிவரும் காலங்களில் இனவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைய வேண்டும்.
இதேவேளை, இதுபோன்ற நிலைமைகளை இனவாதிகள் தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்கும் வண்ணம் முஸ்லிம்களும் தமது அன்றாட நடவடிக்கைகளை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் அமைத்துக் கொள்ள வேண்டும். சகவாழ்வு சிந்தனையை இஸ்லாம் முன்வைத்துள்ளது. இதனை முஸ்லிம்கள் கையில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் மேலும் குறிப்பிட்டார்.