பாறுக் ஷிஹான்
சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் அங்கு போர்நிறுத்தத்தை நிலைநாட்ட ஐ.நாவிடம் வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (1)முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த படுகொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.