ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் 150 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் பயங்கரவாதி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் நேற்று தலிபான் கவுன்சில் அமைப்பின் உறுப்பினர்கள் குவெட்டாவில் இருந்து தஷ்ட்-இ-ஆர்சி பகுதியை பார்வையிட சென்றனர். எனவே அங்கு தலிபான் பயங்கரவாதிகள் அனைவரும் ஒரு மசூதியில் ஒன்றாக கூடினர்.
அவர்களை குறிவைத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி தாக்கின. அதில் குறி தவறி மசூதியையொட்டியுள்ள பள்ளி மீது குண்டுகள் விழுந்தன.
அதனால் பள்ளி கட்டிடமும், அதை ஒட்டியுள்ள மசூதியின் ஒரு பகுதியும் இடிந்தன. குண்டுவீச்சு நடந்தபோது பள்ளியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் கலந்து கொண்டனர். அதனால் இடிபாடுகளில் சிக்கி 150 பேர் பலியாகினர். இவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர்.
இந்த தகவலை தலிபான் பயங்கரவாதிகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் 25 தீவிரவாதிகள் மட்டுமே பலியாகினர் என அரசு தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 50 பேர் குண்டூஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதா டாக்டர்கள் கூறியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசு அமெரிக்க படைகளின் உதவியுடன் பல குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளது. ஆனால் நேற்று நடந்த குண்டு வீச்சில் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.