ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாயினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாக்காளர் பதிவு மையம் உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 20-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏராளமான மக்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நேற்று அடையாள அட்டை வாங்க ஏராளமானோர் வாக்காளர் பதிவு மையத்துக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், தற்கொலை படையைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர், தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். மையத்தின் நுழைவு வாயிலில் மனித வெடிகுண்டு வெடித்ததும், அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்து கட்டிடங்களின் ஜன்னல்கள் நொறுங்கின. கார்கள் சேதம் அடைந்தன.
உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆப்கன் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாஹித் மஜ்ரோ கூறும்போது, ‘‘மனித வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 57 பேர் பலியாகி உள்ளனர்.119 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த தாக்குதலில் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தகவல் வெளியிடப் பட்டது.
காபூல் போலீஸ் தலைவர் தாவூத் அமின் கூறும்போது, ‘‘இது தற்கொலை படை தாக்குதல்தான்’’ என்று உறுதிப்படுத்தி னார்.
இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கு தலிபான் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தலைச் சீர்குலைக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment