ஐக்கிய தேசிய கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் நாளை 07 ஆம் திகதிக்கு முன்னர் விலகிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை சனிக்கிழமையும், மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்போது புதிய நியமனங்கள், தெரிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுமென ஸ்ரீகொத்த தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் மறு சீரமைப்புக்கு ஏதுவாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் தமது பதவிகளிலிருந்து நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பான கடிதங்களை நேற்று அவர்கள் பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கிடையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
இதன் பின்னணியில் நேற்றுக்காலை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கபீர் ஹாஷிம் இராஜினாமாச் செய்தார். அதனையடுத்து கட்சி தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோரும் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.