Top News

தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் செயலமர்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் "தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்" எனும் தலைப்பிலான செயலமர்வு*
2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு ஒன்று நடை பெற்றது. இச்செயலமர்வில் அனைத்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் தலா பத்து நபர்களும், அரபுக்கல்லூரியின் அதிபர்கள் மற்றும் நிருவாகத் தலைவர்களும் , இன்னும் பல நலன்விரும்பிகளும் உள்ளடங்கலாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஹைஅத்துல் குர்ஆன் உயர்கற்கை நெறி கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷைக் பவாஸ் அவர்களுடைய கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையையும், செயலமர்வின் முக்கியத்துவத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் நமது முன்னோர்கள் நாட்டிற்கு செய்த தியாகங்களையும், முஸ்லிம்களது வரலாற்றையும் அழகிய முறையில் தெளிவு படுத்தினார். தொடர்ந்து தற்கால பிரச்சினைகளை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களால் உரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. பிரச்சினைகள் எழுகின்ற போது நாம் நிதானம் இழந்து செயற்படுவதிலோ, அல்லது அந்ந சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிற மதத்வர்களுடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்துவதினூடாகவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.



அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூக்த்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சட்டத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி அஷ்-ஷைக் எம். அஷ்ரப் அவர்களால் சிறந்த வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு உரை இடம் பெற்றது.

அடுத்து தற்காலப் பிரச்சினைகளும் ஊடகமும் எனும் தலைப்பில் விழிர்ப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் அவர்கள் அழகிய முறையில் நிகழ்த்தினார்கள். இதன் போது நாம் ஊடகங்களை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும் என்றும் தமக்கான ஒரு ஊடகம் உருவாக்குவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அன்றைய செயலமர்வின் முக்கிய நிகழ்வாக சகவாழ்வும், அதனை முன்னெடுப்பதில் உள்ள சவால்களும், அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களால் ஒரு உரை நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்வில் சகவாழ்வு என்றால் என்ன அதை முன்னெடுப்பதில் உள்ள தடைகள் என்ன அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பன பற்றிய பூரண தெளிவு ஒன்றை வழங்கினார். இத்துடன் செயலமர்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவிற்கு வந்தது.

லுஹர் தொழுகையை தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வு அனைத்து மாவட்டங்களையும் எட்டு குழுக்காளாக பிரித்து கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் இதுவரை தமது மாவட்டங்கள் சகவாழ்விற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் செய்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு குழுக்களினதும் மும்மொழிவுகள் சபையோருக்கு முன்வைக்கப்பட்டது.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பமான நிகழ்வின் இறுதியமர்வின் முதல் நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப-தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் ஹனீபா அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் எப்போதும் நாம் அல்லாஹ்வுடனான தொடர்பை சீர் செய்ய வேண்டுமென்றும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், நாட்டுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென்றும் சிறந்த வழிகாட்டல் ஒன்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை  மிஞ்சியதாக இருக்கக் கூடாது என்றும் அதே நேரம் அவர்களுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக நாம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டிருப்பதாகவும் அவற்றை உலமாக்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் எமது மார்க்கத்தை பற்றிய தெளிவுகளை மாற்று மதத்தவர்களுக்கு வழங்க தவறிவிட்டதை நினைத்து தௌபா செய்வதுடன் அந்தப் பணியை செய்ய உலமாக்களும், துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரச்சினைகளின் போது தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜம்இய்யா பற்றி வீணாக விமர்சிப்பதை முற்றாகத் தவிர்ந்து ஜம்இய்யா பற்றிய தெளிவுகள் தேவைப்படுபவர்கள் நேரடியக வந்து பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியதுடன் இயக்க வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்படுமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை முடிவிற்கு இட்டுச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலீல் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
Previous Post Next Post