ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தவுள்ள நிலையில், இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செங்கலடி பிரதேச சபை மண்டபத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தினக் கூட்டம் எதிர்வரும் மே 7ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, மாவடிவேம்பு பிரதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு தேசிய கட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்துவது இதுவே முதல் தடவை. இது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே நாங்கள் கருதுகின்றோம்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமான ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் கைப்பற்றியிருந்தது. குறிப்பாக செங்கலடி பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றில் நாங்கள் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இதன் காரணமாக இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தினத்தை மட்டக்களப்பில் நடத்த கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்த மே தின கூட்டத்துக்கு சுமார் 25ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் வெளி மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளில் வரவுள்ளனர்.
தொழிலாளர் தினத்தை நடத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் மே 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செங்கலடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்துக்கு அமைச்சர்களான மஹிந்த அமரவீர, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் கலந்து கொண்டு பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். அதிகமான மக்கள் வெளியூர்களில் இருந்து வருகைத்தரவுள்ளதால் அவர்களுக்காக ஏற்பாடுகள், பஸ் வசதிகள் தொடர்பில் இந்த கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இந்த தொழிலாளர் தினமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படுவதால் எமக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும். எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல மக்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். – என்றார்.
Post a Comment