Top News

ஹபாயா விவகாரம் தொடர்பில் அஸ்மின் வெளியிட்ட கருத்து!

Image result for அய்யுப் அஸ்மின்

ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி விவகாரத்தில் முஸ்லிம் மக்கள் தமது அபாயாவிற்கான உரிமை கோருவதில் எவ்வித நியாயங்களும் இருப்பதாக அறியமுடியவில்லை என வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவர் இந்த பதிவை இட்டுள்ளார். மேலும்,

“ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரி விவகாரத்தில் முஸ்லிம் மக்கள் தமது அபாயாவிற்கான உரிமை கோருவதில் எவ்வித நியாயங்களும் இருப்பதாக அறியமுடியவில்லை  .

இந்துக் கோவில் ஒன்றினுள் முஸ்லிம் மக்கள் தமது வணக்கங்களை மேற்கொள்ள விரும்பமாட்டார்கள், அதற்கு முயற்சிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள். அதைப்போன்ற ஒன்றாகவே இதுவும் எனக்குத் தோன்றுகின்றது.
அங்கு முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிப்பதற்கும் எவ்வித அவசியமும் இல்லை. அதை இந்து மக்களுக்கான பாடசாலையாகப் பேணுவதிலேயே நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படும் என்று நம்புகின்றேன்.

பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டிலே தமது தனித்துவத்தை ஒரு இனம் பேணுவதற்கு விரும்பும்போது, அதனால் ஏனையவர்களுக்குப் பாதிப்புகள் இல்லை என்ற நிலையில் அவர்களது கோரிக்கையை அனுசரித்துப் போவதே சிறப்பானது.

திருமலையில் முஸ்லிம்களுக்கான பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றிலே முஸ்லிம்கள் பணியாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் முழுமையான உரித்தும், வாய்ப்பும் இருக்கின்றது. இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்தல் அவசியம்.

ஹபாயா உரிமை குறித்து இவ்விடத்தில் பேசுவதில் எவருக்கும் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடமாட்டாது.” என அயூப் அஸ்மின் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம் ஆசிரியைகள் மூன்று பேர் சேவைக்காக இணைக்கப்பட்டுத் தமது கடமைகளைச் செய்துவந்த போது இக்கல்லூரியின் உடை நியதிகளுக்கு அமைவாக சேலைஅணிந்தே கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் கடந்த நான்குஆண்டுகளாக எவ்வித வேறுபாடும் இன்றிச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக இந்தக் கல்லூரி சமூகம் எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை.

ஆயினும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முஸ்லிம் ஆசிரியை இடமாற்றம் பெற்று வந்தபோது முஸ்லிம் பெண்கள் அணியும் 'அபாயா' உடையில் கல்லூரிக்கு வந்துள்ளார்.

அவ்வேளையில் கல்லூரி அதிபர் குறித்த ஆசிரியைக்கு அந்தக் கல்லூரி ஆசிரியைகளின் உடை தொடர்பான மரபுகளையும், அப்பாடசாலை ஒழுக்க விதிகளையும் எடுத்துக்கூறி ஏனைய ஆசிரியைகளைப் போன்று சேலை அணிந்து வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியையும் தனது உடையில் மாற்றம் செய்து சேலை அணிந்து வருவதற்கு சிறிது காலஅவகாசம் கோரியிருந்ததால் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு இருந்த வேளையில், இந்த மாதம் 22ஆம் திகதி, ஏற்கெனவே சேலை அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த மூன்று முஸ்லிம் ஆசிரியைகளும் கணவர்மாருடன் கல்லூரிக்கு வந்து தாமும் இனிமேல் 'அபாயா' அணிந்துவரப் போவதாகவும், அது தமது உரிமை என்ற ரீதியிலும் அச்சுறுத்தும் பாணியில் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு அடுத்த நாள் 'அபாயா' உடை அணிந்து வந்துள்ளனர்.

இதனைக் கண்ணுற்ற மாணவிகளும் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகளும் முஸ்லிம் ஆசிரியைகளின் இந்தத் திடீரென ஏற்பட்ட உடைமாற்றம் தொடர்பாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து குறித்த சம்பவம் அரசியல் மட்டம் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post