சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கிய வான்படையினர் கடுமையான வான்தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கின் எஃப் 16 தாக்குதல் ஜெட்கள் சிரிய வான் எல்லைக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடந்த தினம் ஈராக்கின் இராணுவ தின நிகழ்வில் வைத்து அந்த நாட்டின் பிரதமர் ஹைடர் அல் அபாடி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்தே நேற்றைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தென்பகுதியில் உள்ள சிறிய பிரதேசங்களில், ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ளனர்.
அவர்களை 2 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு, சிரியாவின் அரச படையினர் நேற்று காலக்கெடு விதித்திருந்தனர்.
இந்தநிலையில் தாங்கள் சிரிய இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் இந்த தாக்குதலை நடத்தியதாக ஈராக்கிய படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் பாதிப்பு விபரங்கள் எவையும் இன்னும் வெளியாக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள பகுதியானது, பாலஸ்தீன் ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை அண்மித்த பகுதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment