பிரதமருக்கு எதிராக வாக்களிப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் நடைபெற்றுகொண்டிருக்கும் போது பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் குழப்பி நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ள அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்த கறுப்பாடுகளே இன்று பிரதமருக்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசாங்க உறுப்பினர்களாகும்.
அரசாங்கம் வழங்குகின்ற சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக்கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் இவர்களை உடனடியாக அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். இவர்கள் தொடர்ந்தும்அரசாங்கத்தில் இருப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதுக்குரிய காலம் இன்றுடன் மலர்ந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
ஊடகப்பிரிவு