உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா ராணுவம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சவுதி அரேபியா மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 29-ந்தேதி (வியாழக் கிழமை) ஜஷான் நகரின் மீது ஏவுகணை வீசி தாக்கினர். அதை சவுதி அரேபிய ராணுவம் எதிர்கொண்டு தடுத்து அழித்தது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அது நஜ்ரான் நகரம் அருகே வந்து விழுந்தது.
அதை சவுதி அரேபிய ராணுவம் தடுத்து அழித்தது. அதன் உடைந்த பாகங்கள் நஜ்ரான் நகர குடியிருப்புகளின் மீது விழுந்தது. அதில் இந்தியர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் சவுதி அரேபியாவில் நிரந்தரமாக தங்கியுள்ளார்.
சமீபகாலமாக சவுதி அரேபியா மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி தாக்குவது அதிகரித்துள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாகவும் ஏமன் தெரிவித்துள்ளது.
ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் இத்தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.