உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் நாம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர் நகர சபைத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டதின் பின்னர் அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ள உள்ளூர் பகுதிகளுக்கு அவர் இன்று திடீர் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கடந்த கால அரசியல் ஒட்டு மொத்தமான சமூகத்தையும் ஏமாற்றி ஒரு சிலர் வயிறு வளர்ப்பதாகவே இருந்து வந்துள்ளது.
நகருக்குள் சேரும் குப்பைக் கழிவுகளைக் கூட இந்த கையாலாகத்தன அரசியல்வாதிகளால் அகற்ற முடிந்திருக்கவில்லை.
இதனை நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்த ஒரு சில குறுகிய காலங்களுக்குள்ளாகவே மாற்றியமைத்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர சந்தை கேந்திர இட முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
இது இப்பிரதேசத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்தின் மையப் புள்ளியாகவும் சகல இன மக்களும் மலிவு விலையில் பொருள் கொள்வனவு செய்யும் இடமாகவும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.
இந்த சந்தை சுமார் 350 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் சந்தை பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் இந்தப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றியளிக்கும்போது மக்கள் முன்னேறுவார்கள். மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடிய ஆற்றலுள்ளவர்களை தெரிவு செய்துள்ள வேண்டும் என்றார்.