இனவாதம், பக்கச்சார்பு போன்ற பயங்கரமான சிந்தனைகளிலிருந்து ஊடகவியலாளர்கள் தூரமாகி இன ஐக்கியத்தை வளர்க்க முன்வர வேண்டும் - தேசிய ஷூறா சபை செயலமர்வில் வலியுறுத்து
சமூக, அச்சு, இலத்திரணியல் துறைகளில் பணிபுரியும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு, (21) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
தேசிய ஷூறா சபை (தேசிய ஆலோசனை சபை) ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வு, சபையின் உப தலைவரும் ஊடகத்துறை உபகுழுவின் பொறுப்பாளருமான அஷ்ஷேஹ் எஸ்.எச்.எம். பழீல் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும் நொலேட்ஜ் பொக்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எஸ்.ஏ. அஸ்கர் கான், இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மபீர் பாரூக், ரியலிட்டி (Reality) பயிற்சி வளவாளர் ஷாபிர் ஹாஷிம் ஆகியோர் நடத்திவைத்தனர்.
சமூக நல்லிணக்கங்களைக் கட்டியெழுப்புவதில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, சமூக மோதல்களை உருவாக்கும் முரண்பாடுகளை அடையாளம் காணல், அவற்றைக் களைதல் மற்றும் சமூகங்கள் பற்றிய தப்பெண்ணங்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மீதான ஏனையோரின் பிழையான அணுகுமுறை, புரிதல்களுக்கு விளக்கமளிக்க ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் இருக்கும் ஆற்றல்கள் மற்றும் பங்களிப்புக்கள் பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
இலங்கை வாழ் அனைத்து சமூகங்களினதும் ஊடகத்துறையைப் பொறுத்தவரை, சிறந்ததொரு ஊடகக் கலாசாரத்தை நோக்கி நகரவேண்டும் என்றும், அதற்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க அனைவரும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அணிதிரண்டு பரஸ்பர ஒத்துழைப்புக்களை நல்க முன்வரவேண்டும் என்றும் இந்த செயலமர்வின்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.
"இனவாதம், பக்கச்சார்பு, ஓரவஞ்சனை போன்ற பயங்கரமான சிந்தனைகளிலிருந்து ஊடகவியலாளர்களைத் தூரமாக்குவதே இந்தச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும். நாட்டைக் கட்டியெழுப்ப மற்றும் இன ஐக்கியத்தை வளர்க்க அவர்களைத் தூண்டுவதும், இதன் அடுத்த குறிக்கோளாகும். இவ்வாறான இலக்குகளை முன்னிலைப்படுத்தியே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக, தேசிய ஷூறா சபையின் ஏற்பாட்டாளர்கள் இங்கு தெரிவித்தனர்.
தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான பேராசிரியர் ரமீஷ் அப்துல்லாஹ், கலாநிதி ரமீஷ் அபூபக்கர் ஆகியோர் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment