வரியை குறைத்து மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க வேண்டிய அரசு, வரியை அதிகரித்து மக்களின் வாழ்க்கையை சுமையை அதிகரிப்பதை அவதானிக்கின்ற போது, இவ்வரசை நல்லாட்சி அரசென பொய்யாக அழைப்பதை விட, வரியாட்சியென அழைப்பதே பொருத்தமானதென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
தற்போது ஆட்சி செய்கின்ற அரசை அனைவரும் நல்லாட்சி என அழைத்தார்கள். இந்த ஆட்சியில் நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கின்ற போது, நல்லாட்சி எனும் சொற் பதத்துக்கான ஒரு பண்புகளையும் அவதானிக்க முடியவில்லை. நல்லாட்சி என்பது மக்களின் நலனை முன்னிறுத்தியதாக அமைதல் வேண்டும். மாறாக, மக்களின் மீது அநீதிகளையும், சுமைகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு அரசை நல்லாட்சி என அமைப்பது பொருத்தமாகாது.
இந்த ஆட்சி அமையப்பெற்ற பின்பு, இலங்கை நாட்டு மக்கள் பல்வேறு இடர்பாடுகளை அனுபவித்திருந்தனர். அதில் பிரதானமானது வரிச் சுமையாகும். இந்த ஆட்சி அமைந்தது தொடக்கம் இன்று வரை புதுப்புதி வரிகளை அதிகரித்திருந்தது. அண்மையில் நாய்களுக்கு கூட வரியை அதிகரித்திருந்தது. அந் நேரத்தில் பிச்சை காரர்களை கூட, இந்த அரசு விட்டு வைக்காதென பாராளுமன்றத்திலேயே ஒரு பேச்சு சென்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைவாக புதிய உள் நாட்டு வருவாய் சட்டத்தின் ஊடாக புதிய வரிகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனை அவதானிக்கின்ற போது, மக்களின் பணத்தை ஆழ ஊடுருவி உறிஞ்சி எடுப்பதாகவே அமைந்துள்ளது. இந் நிலையை தொடர விட்டால், இவ்வரசு இலங்கை மக்களை வறுமைக்குள் வலித்து தள்ளப்படுவதாக அமைந்துவிடும்.
இது பற்றி ஏதேனும் கேள்வி எழுப்பினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பட்ட கடனை அடைக்கவே இவ்வாறு செய்கிறோம் என்பார்கள். இம்முறை இவ்வாறான நியாயப்படுத்தல்கள் சற்று குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இனியும் அவ்வாறு கூற முடியாதல்லவா?
இந்த ஆட்சியாளர்கள் பெருமளவான மக்கள் பணத்தை சூறையாடியுள்ளனர். அதனை பிணை முறி விவகாரத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இவற்றை மிக அவசரமாக மூடி மறைத்தாக வேண்டும். அவர்கள் இழந்த பணத்தை நிரப்பிக்கொள்ள எத்தனையோ, மக்களை பாதிக்காத மாற்று வழிகள் இருந்தும், அவற்றை எல்லாம் செய்யாது (செய்வதற்கு தெரியாது), மக்களிடம் இருந்து உறிஞ்சி எடுக்கவே இவ்வாறான வரிகளை இவ்வரசு விதித்துக்கொண்டிருக்கின்றது. இவற்றை இலங்கை மக்கள் புரிந்து கொண்டு, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புகட்டிய பாடத்தை விட, சிறந்த பாடம் புகட்ட தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.