Top News

வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!

unnamed


-தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்!-

எஸ். ஹமீத்

அவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு.

நிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள்.

அந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.

காஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.

பெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.

வாரமொன்று கழிந்த நிலையில் வாடி, வதங்கி, உயிரற்று உதிர்ந்த மலராகக் கிடந்த ஆஷிஃபாவின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.

அப்புறமென்ன…?

மருத்துவப் பரிசோதனை…விசாரணைகள் என்று தொடர்கின்றன.

கோல நிலவான ஆஷிஃபா வன்கொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று மருத்துவம் சான்றிதழ் தருகிறது.

வயசுக்கு வந்திராத-வாழ்வின் இனிமைத் தேனைச் சற்றேனும் சுவைத்தறியாத- அந்த வண்ணத்துப் பூச்சி நிகர்த்த சின்னஞ்சிறு சிறுமியைச் சிதைத்து அழித்த வஞ்சகன் அல்லது வஞ்சகர்கள் யார்? யார்யார்?

விசாரணைகளின் பின்னர் ஒரு பதினெட்டுக்குட்பட்ட வயதுடையவனும் கூடவே ஒரு போலீஸ் அதிகாரியும் சிக்குகிறார்கள். அந்தப் போலீஸ் அதிகாரியின் பெயர் தீபக் ஹஜூரியா.

இந்தத் தீபக் ஹஜூரியாதான் ஆஷிஃபா காணாமற் போனதன் பின்னர் அவளைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.

இந்துத்துவக் கும்பல் ஒன்றினால் இளஞ்சிறுமி ஆஷிஃபா கடத்தப்பட்ட பின்னர், ஒரு கோவிலில் மறைத்து வைக்கப்பட்டு, அந்தக் கும்பலினால் வன்புணர்வுக்குள்ளாகிக் கொண்டிருந்த நேரம், இந்தப் போலீஸ் அதிகாரி என்னும் பொல்லாக் கொடூரன் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அந்தப் பிஞ்சு ஆஷிஃபாவைத் தானும் வன்புணர்வு செய்து தனது மிருக வெறியைத் தீர்த்துக் கொண்டவன்.

அதன் பின்னர் எல்லோருமாய்ச் சேர்ந்து ஆஷிஃபாவைக் கொன்று முட்புதருக்குள் வீசியிருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவங்களின் பின்னணியில் இப்போது இந்து வெறி கொண்ட ஆண்களும் பெண்களும் காஷ்மீரில் ஊர்வலம் செல்கிறார்கள். அதுவும் இந்தியத் தேசியக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி!
‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு!’ என்று அவர்கள் கோஷமெழுப்பவில்லை.

மாறாக, ‘ஆஷிஃபாவைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்’ என்ற வெட்கங்கெட்ட கோரிக்கையை முன்வைத்து ஊர்வலத்தில் முழுத் தொண்டையும் கிழியுமளவிற்கு முழக்கமெழுப்பியுள்ளார்கள்.

ஏ, இரக்கமும் இனிய அறமும் கொண்ட இந்திய இந்து மக்களே…! எங்கே, உங்கள் மனசாட்சிகளைக் கொஞ்சம் பேச விடுங்கள், பார்க்கலாம்!

unnamed (1)

Post a Comment

Previous Post Next Post