பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுக்களில் 13 குற்றச்சாட்டுக்கள் மத்திய வங்கி பிணைமுறி சம்பந்தமானவையாகும். 14 ஆவது குற்றச்சாட்டானது மிக அண்மையில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்று முடிந்த வன்முறை தாக்குதல்களின்போது சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த பிரதமர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விவகாரம் பற்றியதாகும்.
இந்தக்குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டித்து முன்னர் காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டவர்களும் கூட தற்போது பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரதமர் அவ்வாறு மெத்தனப்போக்காக நடந்துகொண்டது ஒரு சாதாரண சிறியவிடயம்தான் என வாக்களித்தவர்கள் கருதுவதாகப் பொருள்படுகின்றது. சில முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்துள்ள போதிலும் மற்றவர்கள் சமுகநலன்களைப் புறம்தள்ளி பிரதமர் பக்கம் சார்ந்து நின்று தங்களது விசுவாசத்தை அபரிதமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இன்னும் ஒரு படி மேல் சென்று இந்தவிடயத்தை குற்றச்சாட்டுப் பட்டியலில் உள்ளடக்கியதானது வேண்டுமென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பலிக்கடாவாக்க முற்பட்டதற்குச் சமமானதென்றும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வேதனையை கொண்டாட்டமாக பார்ப்பது போன்றதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த விவகாரமானது குற்றப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டதனை ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகவே கருதுகின்றனர். ஒருசிலருக்கு அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்ந சமுகநலம்சார்ந்த விடயம் வேதனைப்படக் கூடிய தொன்றாக இருக்கலாம்.
அதற்காக முழு முஸ்லிம்களும் வேதனைப் படுவதாகக் கூறமுடியாது.
பாதுகாப்புப்படையினர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு புனிதப்போரை நடாத்தி வெற்றிகொண்ட களிப்பில் இருக்கும் போது போரின் எச்சங்களாக அவ்வப்போது இடம் பெறும் சிறு சிறு சம்பவங்களை பெரிதுபடுத்தக்கூடாது என்ற பெரும்பான்மைச் சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே அம்பாறை மற்றும் கண்டி சம்பவங்கள் பட்டியலில் இடம் பெற்ற விடயம் வேதனையைக் கொடுக்கும்.
முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்களில் மெத்தனப்போக்கு கடைப்பிடிக்கப்பட்ட விடயம் எம்மைப் பொறுத்தவரையில் பட்டியலில் முதலாவதாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே யதார்த்தமாகும்.
இக்காலகட்டத்தில் இடம்பெறும் அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓரு நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது சமூகத்திற்கு எதிரான வன்முறைச் சம்பவமும் ஒருகாரணியாக பதிவுசெய்யப்பட்டதற்காக நாம் ஆறுதலடைய வேண்டும்.
இம்முறை ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் கூட முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விடயம் முக்கியமாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் சமகாலத்தில் உள்நாட்டில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் கூட ஒரு குற்றச்சாட்டாக இது இடம்பெற்றிருப்பதானது எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பான மீளாய்வு மற்றும் சீராய்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாகவும் இருக்கும்.
வாக்கெடுப்பைப் பொறுத்த வரையில் கூறுவதானால் ஒரு கயிறு இழுப்புப் போட்டியின் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. சிறுபாண்மைச் சமூகத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்றிக்கடன்கள் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கயிறிழுப்பின் போது சிலவேளை கோஷ்டிகள் இடம்மாறலாம் ஆனாலும் இழுப்பதற்குத் தேவையான கயிறு இருந்தாலும் அதற்கான களம் இருக்குமோ தெரியாது.
நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரான நிலைமைகள் எவ்வாறு அமையும் ?
இதற்கான பதிலை உடனடியாக சொல்வதென்பது இலகுவான காரியமல்ல.
பெரும்பான்மை சமுகம் சார்ந்த எல்லா கட்சிகளுக்குள்ளும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எஞ்சிய ஒன்றரை வருட காலத்துக்குள் இவ்வாறான ஒரு இக்கட்டான நிலைமையைச் சீர் செய்ய முடியுமா என்பதைப்பொறுத்தே எல்லாம் அமையும்.
பெரும்பான்மை சமுகம் சார்ந்த எல்லா கட்சிகளுக்குள்ளும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எஞ்சிய ஒன்றரை வருட காலத்துக்குள் இவ்வாறான ஒரு இக்கட்டான நிலைமையைச் சீர் செய்ய முடியுமா என்பதைப்பொறுத்தே எல்லாம் அமையும்.
கொடுப்பதைக் கொடுத்து எடுப்பதை எடுத்து முடிப்பதற்கு வசைந்து கொடுக்கக்கூடியவர்களையெல்லாம் சமாளித்தாகிவிட்டது. இனி எஞ்சி உள்ளவர்கள் தங்களை இனம்காட்டிக் கொண்டு களத்தில் இறங்கியவர்கள். எதிர்வரும் தேர்தல்களில் பொரிந்து தள்ளுவதற்காக இரைதேடிக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு இலகுவாக சமாளிக்க முடியாதவர்கள் மட்டுமல்லல எதையும் ஊதிப்பெருக்கக் கூடியவர்களும்கூட.
சிறுபான்மை தமிழ்க்கட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் தங்களது நீண்ட காலப்பிரச்சினைகளுக்கான சாதகமான தீர்வுகளை துரிதப்படுத்தும் ஓரு யுக்தியாக பிரதமருக்கு நிபந்தனையுடனான ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அவர்களது நிபந்தனைகள் மேல்மட்ட தலைமைகளால் மக்கள் முன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் தரப்பினரின் நிபந்தனைகள் பற்றிய பட்டியல் இன்னும் உத்தியோகபுர்வமாக பகிரங்கப்படுத்தப்படவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் வாக்கெடுப்புக்கு முன்னரே வெளிப்பட்டிருக்கும்.
எப்படியாக இருந்தாலும் இவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் போது பல்வேறு சிக்கல்கள் தோற்றுவிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இனங்களுக்கிடையில் பூரணமான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாத நிலைமையில் எவ்விததீர்வுகளும் உடனடியாக சாத்தியப்படப் போவதில்லை. போதாக்குறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தப்பிப்பிழைத்ததற்கான காரணம் சிறுபான்மையினரினது வாக்குகள்தான் என்பது துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வைத் தேடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதனை எதிர்ப்பவர்களின் தரப்பு கூர்மையடைந்து அவ்வவ்போது அரங்கேற்றப்படும் அசம்பாவிதங்கள் வன்முறைகளால் புடம் போடப்பட்டு புதிய வேகத்துடன் கட்டவிழ்வது ஒரு தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்வதென்பது நம்நாட்டில் புளித்துப்போன வழமையான சம்பவமாகும்.
தென் ஆபிரிக்கா போன்ற அனுபவம் மிக்க தரப்பினரினரதும், நமது பிராந்தியத்தில் அண்மித்துள்ள நாடுகளினதும் அனுசரணையுடனான திறந்த பேச்சுவார்த்தைகள் மூலம் எடுக்கப்படும் முயற்சிகளினால் மட்டுமே ஓரளவு வெற்றியடையக் கூடிய வாய்ப்புள்ளது. வரட்டுக் கௌரவத்தை ஒதுக்கிவைத்து விட்டு நாட்டினதும் வாழும் மக்களினதும் நலத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் முயற்சிகளே பலனளிக்கும். உள்ளக முயற்சிகள் ஒரு போதும் நிரந்தர தீர்வுகளுக்கு வழிவகுக்காது என்பது கடந்தகாலம்களில் நாம் கண்டுகொண்ட பாடங்களாகும். ஏன்று மில்லாதவாறு கூர்மையடைந்து கூறுகளாக சிதறிக்கிடக்கும் இனவாத சிந்தனைகளும் ஏட்டிக்குப் போட்டியாக காய்களை நகர்த்தும் போக்குகளும் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை.
புதிய கூட்டமைப்பின் எதிர்காலம் வெளிப்பாடுகள் தொடர்பில் உள்ளது?
எமது கூட்டமைப்பின் கன்னி முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது. எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு நிந்தவூர், சம்மாந்துறை, இறக்கமம் போன்ற சபைகளைக் கைப்பற்றியுள்ளோம்.
இவைதவிர தனியாக எமது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை, ஏறாவவூர் பிரதேசசபை மற்றும் ஏறாவூர் நகரசபை, கல்பிட்டி பிரதேச சபை போன்ற இடங்களிலும் உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம்.
பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் எம்மை விட்டுப் பிரியும் போது அவரால் நடைமுறைப்படுத்தப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் யாப்பையே எமது புதிய சமாதான கூட்டமைப்பின் யாப்பாக பதிவுசெய்துள்ளோம்.
அவரின் கொள்கைகைளையும் கோட்பாடுகளையும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன்மை மாறாத வகையில் விதைத்து விட்டு அவர்களிடமே எதிர்கால அரசியல் பயணத்தை பாரப்படுத்துவதே எமது நோக்கமாகும். தலைவரவர்கள் மரணித்த வருடத்தில் பிறந்த குழந்தைகள் தற்போது வாக்காளர்களாக வளர்ந்துள்ளார்கள். ஆனாலும் அவரது சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. அவைகள் புடம் போடப்பட வேண்டும். மிகவும் சவாலான ஒரு பணியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். வெற்றி பெறும் வாய்ப்புக்களைப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடத் தீர்மானித்துள்ளீர்கள்?
இக்கேள்விக்கு தற்போதைய காலகட்டத்தில் சரியான பதிலைச் சொல்வது கடினமாகும். ஏனெனில் எமது கூட்டணியில் இன்னும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் போன்றனவற்றை நாம் உள்வாங்கும் பணியை மேற்கொள்ளவுள்ளோம்.
கூட்டுத்தலைமைத்துவத்தை யாப்பாகக் கொண்ட எமது கூட்டணியின் முடிவுகளை தனியொருவனாக என்னால் கூற முடியாது. தேர்தல் முறைகள் மாற்றங்களும் இடம் பெறப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எமது எதிர்கால முடிவுகள் அமையும்.
தேர்தல் முறை மாற்றம் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இது ஒரு முக்கியமான விடயம் அண்மையில் நடந்து முடிந்த கலப்பு தேர்தல் முறையில் பல குளறுபடிகள் உள்ளதை சகலதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே முறையில்தான் அடுத்த தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
சிறுபிள்ளைகள் ஒன்று கூடி மணல் வீடுகட்டி விளையாடியது போல கலப்பு தேர்தல் முறைமைக்கு பாராளுமன்றத்தில் எல்லோரும் கை உயர்த்தி ஆதரித்து விட்டு தற்போது கைசேதப்படுகின்றனர். வினைத்திறனற்ற பலர் ஒன்று கூடி பிரச்சினைக்குரிய ஒரு தேர்தல் முறையைப் பலாத்காரமாக மக்கள்மீது திணித்துவிட்டனர். ஓரு வரையொருவர் குற்றம் சாட்டும் அளவுக்கு சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த லட்சணத்தில் மாகாண சபைத்தேர்தலும் 50க்கு 50 என்ற கலப்பு முறையில் நடைபெறப்போவதாக வேறு தீர்மானித்துமுள்ளனர்.
மாகாணசபைத் தொகுதி எல்லைகள் வகுக்கப்பட்ட விடயத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதிகள் நடந்துள்ளன. எல்லை நிர்ணயசபையில் எமதுசமூகம் சார்பில் இடம்பெற்றிருந்த டாக்டர். ஹஸ்புல்லாஹ் இது பற்றி ஒரு தனியான அறிக்கையை அதிருப்தியுடன் வெளியிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை, பொத்துவில் மற்றும் சம்மாந்துறைத் தொகுதிகளின் நிலப்பரப்புக்கள் சுரண்டப்பட்டு பெரும்பான்மை இனத்தினர் வாழும் அம்பாறை தொகுதியுடன் இணைக்கப்பட்டு மூன்று புதிய பெரும்பான்மைத் தொகுதிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய அம்பாறை மாவட்டம் 1961ல் உருவாக்கப்பட்ட போதும் பின்னர் 1987ல் புதிய உளளுராட்சி மன்ற எல்லைகள் வகுக்கப்பட்ட போதிலும் நடந்த சுரண்டல்கள் போல் தற்போது புதிய மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகள் மீளமைக்கப்படும் போதும் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் எல்லை நிர்ணயம் நடைபெறும் போது தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்புக்கள் சுரண்டப்படுவது ஒரு சாதாரணமான விடயமாகும்.
ஏனவே, புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வகுக்கப்படுவதற்கு முன்னர் தற்போதுள்ள சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் தொகுதிகள் மூன்றும் சேர்ந்த ஒரு புதிய தேர்தல் மாவட்டம் கிழக்கில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவசரமாகவும் அதிமுக்கியமாகவும் முன்வைக்க வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கிளிநொச்சி போன்று, வன்னி மாவட்டத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்று அம்பாறையில் கல்முனை தேர்தல் மாவட்டமொன்று தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்படுவது அவசியமாகும்.
எனவேதான் கட்சி போதங்களுக்கப்பால் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய தேர்தல் மாவட்டத்தைப் பெறுவதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.
இன்றேல் நமது வாக்குப்பதிவு எண்ணிக்கைகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் முதன்மைப்படுத்தி நாம் எடுக்கும் தீர்மானம்கள் மீது ஒரு சதவீதமேனும் நாம் வசிக்காத பகுதியிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குப்பதிவு எண்ணிக்கைகள் ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான நிலமை தவிர்க்க முடியாததாகிவிடும்.
இது அரசியல் தற்கொலைக்குச் சமமாக முடியும்.
வடகிழக்கு மாநிலம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகம் அதில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையையும், தனித்துவத்தையும் பேணவேண்டுமானால் இக்கோட்பாடுகளை மையமாகக் கொண்ட நிலப்பரப்புகளில் தத்தமது அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். புரிந்துணர்வுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
தலைவர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு
செயலாளர் நாயகம் ஜக்கிய சமாதான கூட்டமைப்பு
முன்னாள் ராஜாங்க அமைச்சர்
நன்றி தினக்குரல்