பாடசாலைக்குள் தீர்க்க வேண்டிய விடயத்தை தேசியப்பிரச்சினையாக
மாற்றி தமிழ் - முஸ்லிம் உறவில் முறுகலை ஏற்படுத்த சதித்திட்டம்!
பிரபல சமூக ஆர்வாளர் றுஸ்வின் சுட்டிக்காட்டு
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகாரம் பாடசாலைக்குள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய பிரச்சினையாக இது மாற்றப்பட்டுள்ளது.
ஒற்றுமையாக வாழ்கின்ற இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகவே இது பார்க்கப்பட வேண்டும் என பிரபல சமூக ஆர்வாளர் மொஹமட் றுஸ்வின் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:-
“திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து முஸ்லிம் ஆசிரியர்கள் வருவதற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன். சிறு விடயமொன்றை இவ்வாறு ஊதிப் பெரிதுபடுத்தி தேசிய மட்டத்தில் பேசப்படும் ஒரு பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படும் அளவுக்கு இந்த விடயம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.
இந்து பாடசாலையாக இருந்தாலும் சரி, முஸ்லிம் பாடசாலையாக இருந்தாலும் சரி இலங்கையில் சட்டம் என்று ஒன்றுள்ளது. அதற்குற்பட்ட வகையிலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சட்டத்துக்கு முரணாக எவரேனும் செயற்பட்டால் அவருக்கு எதிராக கல்வித் திணைக்கள ரீதியாக நடவடிக்கை எடுக்க பல வழிமுறைகள் இருந்த போதிலும், திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் அதற்கு மாற்றமான முறையிலேயே நடத்துள்ளது. இதற்கு முழுப்பொறுப்பையும் பாடசாலை நிர்வாகமே ஏற்க வேண்டும்.
அவர் அவர் தனிப்பட்ட விடயங்களில் எவருக்கும் தலையிட முடியாது. சகல இன மக்களுக்கும் தமது கலாசார உடைகளை அணிவதற்கான சுதந்திரம் இந்த நாட்டில் உள்ளது.
ஸ்ரீசண்முகா இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவம் பாடசாலைக்குள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். ஆனால், பாடசாலைக்குள் தீர்வு காணாது அதற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய பிரச்சினையாக இது மாற்றப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் தேங்காய் பூவும் பிட்டும் போல் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆகவே, இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் ஏற்படக் கூடாது. தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக பாடசாலைகளுக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. – என்றார்.
Post a Comment