Top News

முஸ்லிம்கள் மீதான இனவாத வன்செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் எடுத்துரைப்பு



முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக் கொண்ட ஜன் சஹ்ரடில் மேப் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு இன்று (05) வியாழாக்கிழமை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
பிரஸ்தாப கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் மேலும் கூறியதாவது;
மூன்று தசாப்தகாலம் நீடித்த கொடூர யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்த சூழ்நிலையில், சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள் மீதான இனவாத செயல்கள் அரசியல் பொருளாதார உள்நோக்கங்களை வைத்து தீயசக்திகள் முன்னெடுத்து வருகின்றன.
உங்களுடைய நாடுகளில் இவ்வாறான வன்செயல்கள் நடக்க நேரும்போது உளவுத்துறை அதனை விரைவாக கண்டறிந்து விடுவார்கள். ஆனால், விழிப்புடனிருந்து துப்புத்துலக்கக்கூடிய உளவுத்துறையின் செயற்பாடு இங்கு மந்தகதியிலேயே இருக்கின்றது. அத்துடன், வெறுப்பூட்டக்கூடிய பேச்சை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.
மனித உரிமை மீறல் விடயங்கள் பற்றியும், யுத்தக் கைதிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அதுபற்றி தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவதப்படுத்தும் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருவதோடு, பொது அமைப்புக்களும் குரல்கொடுத்து வருகின்றன.
முஸ்லிம்களுக்கெதிரான அண்மைய இனவாத வன்செயல்களையடுத்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கும் முதலீட்டாளர்கள் தயக்கமடைந்துள்ளனர்.
தேசிய அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோயை கட்டுப்படுத்தவதற்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
எனது பொறுப்பிலுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சைப் பொறுத்தவரை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரித்து வருகிறது. நிலத்தடி நீர் மாசடைந்துள்ள பிரதேசங்களிலும், சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களிலும் கடல் நீரை சுத்திகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு நவீன தொழில்நுட்ப பொறிமுறைகளை கையாண்டு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கத்தில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்றார்.
அமைச்சர் கூறியவற்றை கவனமாக செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் மேற்படி விடயங்கள் மீது போதிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், ஏ.எல்.எம். நசீர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் பங்குபற்றினர்.
Previous Post Next Post